பேஸ்புக் விளம்பரங்கள் மூலம் வாகனங்களை விற்பனை செய்துவிட்டு, பின்னர் அதே வாகனங்களை மீண்டும் திருடி வந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யக்கல பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
கடந்த ஜூலை 1ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் நிவாரண பிரிவில் நபர் ஒருவர் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அதில், தான் 40 இலட்சம் ரூபாய் கொடுத்து வாங்கிய வேன் ஒன்றை, துப்பாக்கி ஏந்திய கும்பல் ஒன்று கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணையைத் தொடங்கினர்.
இந்தத் திட்டமிட்ட கொள்ளைச் சம்பவத்தின் பின்னணியில், பெலும்மகராவின் முதுன்கொட பகுதியில் உள்ள வாகன விற்பனையக உரிமையாளர் உட்பட சுமார் 10 பேர் அடங்கிய கும்பல் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தக் கும்பல் முதலில் பேஸ்புக்கில் வாகன விற்பனைக்கான விளம்பரங்களை வெளியிடும். அதை நம்பி வாங்குபவர்களிடம் வாகனத்தை விற்ற பிறகு, அவர்களை ரகசியமாகப் பின்தொடர்ந்து சென்று, வாகனங்களை மீண்டும் கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 13ஆம் திகதி யக்கல பகுதியில் வைத்து சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில், நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலகெதிஹேன பகுதியில் உள்ள வாகன விற்பனையக உரிமையாளரின் இடத்திலிருந்து 2 வாள்கள், 2 கைத்துப்பாக்கி மெகசின்கள், 3 தோட்டாக்கள் மற்றும் ஒரு ஜீப் வண்டி ஆகியவற்றை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். தற்போது இந்த விற்பனையக உரிமையாளரும், கொள்ளையில் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களும் தலைமறைவாகியுள்ளனர்.
இதே பாணியில் இக் கும்பல் நடத்திய மேலும் இரண்டு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாகவும் புகார்கள் கிடைத்துள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று (14) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, நாளை (16) வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவினர் இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.










