பட்ஜட்மீது நாளை வாக்கெடுப்பு: எதிர்த்து வாக்களிக்க மலையக கட்சிகள் திட்டம்?

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு நாளை (20) மாலை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
இதன்போது பாதீட்டுக்கு எதிராக வாக்களிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, சர்வஜன அதிகாரம், ஐக்கிய தேசியக் கட்சி என்பனவும் எதிராகவே வாக்களிக்கவுள்ளன. எனினும், தமிழ்த் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடு இன்றைய தினமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என தெரியவருகின்றது.
மலையக கட்சிகளும் பாதீட்டுக்கு எதிராக வாக்களிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், நாளைய தினமே இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 13 ஆம் திகதி ஆரம்பமானது. இரண்டாம் வாசிப்புமீதான விவாதத்துக்கு 7 நாட்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையிலேயே நாளை நவம்பர் 20ஆம் திகதியான
நாளை மாலை 6.00 மணிக்கு இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு குழுநிலை விவாதம் நடைபெறவுள்ளது. டிசம்பர் 14ஆம் திகதி பிற்பகல் 6.00 மணிக்கு வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, குழுநிலை விவாதக் காலப்பகுதியில் அரசாங்கத் தரப்புக்கு 40 சதவீதமும் எதிர்க்கட்சிக்கு 60 சதவீதமும் என்ற அடிப்படையில் நேரம் ஒதுக்கப்படவுள்ளது.
அத்துடன், அமைச்சொன்றின் செலவினத் தலைப்பு தொடர்பில் வாக்கெடுப்பு கோரப்பட்டால், குறித்த வாக்கெடுப்பு அன்றைய தினத்தின் இறுதியில் மாலை 6.00 மணிக்கு நடத்தப்படும்.
………………
ஈ.பி.டி.பி.யின் முன்னாள் உறுப்பினர்கள் 8 பேருக்கு மரண தண்டனை

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவில் 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற கடத்தல் மற்றும் கொலைச் சம்பவம் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) முன்னாள் உறுப்பினர்கள் எட்டு பேருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இன்று (நவம்பர் 19) மரண தண்டனை விதித்துள்ளது.
மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி டி.ஜே. பிரபாகரன் இந்தத் தீர்ப்பை வழங்கியதுடன், இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பதாவது நபரை விடுதலை செய்து, அவரை விடுவிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
2008ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் திகதி, செங்கலடி பகுதியில் அமைந்திருந்த ஈ.பி.டி.பி. முகாமில் தங்கியிருந்த உறுப்பினர்கள் குழுவொன்று, தேவதாஸ் சுரேஷ் குமாரை வான் ஒன்றில் கடத்திச் சென்று கொலை செய்ததாகவும், பின்னர் அவரது சடலத்தை புதைத்து, புதைக்கப்பட்ட இடத்தில் வாழைக்கன்று ஒன்றை நட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த ஏறாவூர் பொலிஸார், ஈ.பி.டி.பி.யைச் சேர்ந்த ஒன்பது பேரைக் கைது செய்து, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.
ஆரம்பகட்ட நீதவான் விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், 2016ஆம் ஆண்டு இந்த வழக்கு விசாரணைக்காக மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
நீண்டகாலமாக நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வானும் மீட்கப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் எட்டு பேர் குற்றவாளிகளாகக் காணப்பட்டு, அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
………
கவிஞர் சேரன் கனடாவில் காலமானார்

ஈழத்துக் கவிஞரும் கனடாவின் வின்சர் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியருமான கலாநிதி சேரன் உருத்திரமூர்த்தி ரொறன்ரோவில் நேற்றிரவு காலமானார்.
சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்றிரவு 8.30 மணியளவில் காலமானார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அளவெட்டியை பிறப்பிடமாக கொண்ட, பிரபல கவிஞர் மகாகவி உருத்திரமூர்த்தியின் மகனான, சேரன் கவிஞர், நாடக ஆசிரியர், இலக்கிய விமர்சகர் மற்றும் சமூகவியல் பேராசிரியர் என பல்துறை இலக்கிய பரிமாணம் கொண்டவர்.
ஈழத்துப் போர்க்காலச் சூழல், இடப்பெயர்வு, புலம்பெயர் வாழ்க்கை, மனித உரிமைகள் மற்றும் காதல் ஆகியவற்றைத் தனது கவிதைகளில் ஆழமாகப் பதிவு செய்தவர்.
இவரது கவிதைகள் ஆங்கிலம், சிங்களம், ஜேர்மன், டச்சு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
…………..
ஜனாதிபதியை சந்தித்தார் சீனத் தூதுவர்

இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங், சிறிலங்கா ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக சீனத் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது, சீனா-சிறிலங்கா இடையிலான இருதரப்பு உறவுகள், இரு நாடுகளுக்கு இடையிலான நடைமுறை ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர ஆர்வம் கொண்ட விவகாரங்கள் குறித்து ஆழமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
……………
அமெரிக்க தூதுவர், ஜனாதிபதி சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், எரிக் மேயர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்து பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பு குறித்து அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இன்று சந்தித்து, அமெரிக்கா – இலங்கை இடையிலான ஒத்துழைப்பின் எதிர்காலம் மற்றும் இரு தரப்புக்கும் பொதுவான முன்னுரிமைகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன்.
எங்களது வளர்ந்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு, நாடுகடந்த குற்றச் செயல்களை எதிர்கொள்வதில் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான கூட்டு முயற்சிகள், மற்றும் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் நம்பகமான அமெரிக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து நாங்கள் கலந்துரையாடினோம்.
எங்கள் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பொருளாதாரங்களுக்கு ஆதாரமாக விளங்கும் வர்த்தகப் பாதைகளைப் பாதுகாக்கவும், மேலும் சுதந்திரமான, திறந்த மற்றும் வளமான இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கர்களுக்கும் இலங்கையர்களுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும், இதுவரை அடைந்துள்ள இந்த முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்த நாங்கள் உறுதியுடன் உள்ளோம். என்று“ அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
……………
வங்கிக் கணக்குகளை இலக்கு வைத்து மோசடி! கண்டியில் 80 வயது முதியவரிடம் ரூ.70 இலட்சம் கொள்ளை

கண்டியில் முன்னணி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் அதிகாரிகள் எனக் கூறி, வாடிக்கையாளர்களை ஏமாற்றி வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை கொள்ளையிடும் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இவ்வாறான நிதி மோசடிகள் தொடர்பில் கடந்த சில நாட்களில் கண்டி பொலிஸாரிடம் 12க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோசடியில் 80 வயதுடைய முதியவர் ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து 70 இலட்சம் ரூபாய் மோசடியாகப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மோசடியாளர்கள் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் வட்ஸ்அப் ஊடாக வாடிக்கையாளர்களை ஏமாற்றி வருகின்றனர். சில சந்தர்ப்பங்களில், வங்கிகளின் உத்தியோகபூர்வ இலச்சினைகளை (Logo) வாடிக்கையாளர்களின் கைப்பேசித் திரைகளில் தோன்றச் செய்து, தங்களது தகவல்களை நம்பகமானவையாக காட்டி மோசடியில் ஈடுபடுகின்றனர்.
இதன் மூலம் வாடிக்கையாளர்களிடமிருந்து வங்கிக் கணக்கு விபரங்கள், கடவுச்சொற்கள் மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொற்கள் (OTP) உள்ளிட்ட இரகசிய தகவல்களை உரையாடல்கள் அல்லது அனுப்பப்படும் இணைப்புகள் ஊடாக பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர்.
இந்நிலையில், வங்கிக் கணக்குகளின் கடவுச்சொற்கள் மற்றும் OTP இலக்கங்களை எவருடனும் பகிர வேண்டாம் என பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தொலைபேசி அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் ஊடாக வங்கிகள் இவ்வாறான இரகசிய தகவல்களை கோருவதில்லை எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், கைப்பேசித் திரையில் வங்கியின் உத்தியோகபூர்வ இலச்சினை தோன்றுவதால் மாத்திரம் அழைப்புகள் அல்லது செய்திகளை நம்பிவிட வேண்டாம் என்றும், சந்தேகத்திற்கிடமான தொடர்புகளுக்கு பதிலளிக்கும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் பொதுமக்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
…………
நாமல் ராஜபக்சவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற விசாரணைக் குழுவில் வழக்கை எதிர்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு, மேல் நீதிமன்ற நீதிபதி பிரியந்த லியனகே (தலைவர்), மேல் நீதிமன்ற நீதிபதி திலகரத்ன பண்டார மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதி நுவன் தம்மிக்க பண்டார ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, குற்றம் சாட்டப்பட்ட நாமல் ராஜபக்சஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, அவருக்கு பிணை வழங்குமாறு கோரி நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்தார்.
எனினும், வழக்குத் தொடரும் தரப்பு சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, பிணை வழங்குவதற்கு அவசியமான விசேட சூழ்நிலைகள் எதுவும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து, இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதிகள் குழாம், நாமல் ராஜபக்சவை டிசம்பர் 2ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
…………
சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 8 ஆரம்பம்
2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகி, 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் அனுமதி அட்டைகளில் பெயர், பாடம் அல்லது ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியிருப்பின், அவற்றை உரிய காலப்பகுதிக்குள் சரிசெய்து கொள்ளுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
பரீட்சை அனுமதி அட்டைகளில் ஏதேனும் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய பரீட்சார்த்திகள், எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக மாத்திரமே அத்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர், அனுமதி அட்டைகளில் எவ்விதமான திருத்தங்களையும் மேற்கொள்வதற்கு எந்தவொரு சந்தர்ப்பமும் வழங்கப்படமாட்டாது.
எனவே, அனைத்துப் பரீட்சார்த்திகளும் மற்றும் பாடசாலை அதிபர்களும் இது குறித்து உரிய கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுவதாக பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
……………
பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவுக் கொடுப்பனவு இம்முறை வரவு–செலவுத் திட்டத்தில் ‘வெட்டிக் குறைக்கப்பட்டது

2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மற்றும் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நிதி அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, 2026 நவம்பர் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அந்த வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கல்வி அமைச்சரான பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, வரலாற்றில் முதன்முறையாக கல்வித்துறையின் மூலதனச் செலவீனங்களுக்காகப் பாரிய முதலீடு செய்யப்பட்டு, 2027ஆம் ஆண்டுக்காக 749 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்தப் பாரிய முதலீடு மொத்த அரசாங்கச் செலவீனத்தில் 12 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளதாகவும் பிரதமர் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியிருந்தார்.
எதிர்வரும் ஆண்டுக்கான பாடசாலை போசாக்குத் திட்டத்திற்கு 30 பில்லியன் ரூபாயும், விளையாட்டு பாடசாலைகளின் மாணவர்களின் போசாக்கிற்காக 0.16 பில்லியன் ரூபாயும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை அதிகரிக்குமாறு தொடர்ச்சியாகக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்த போதிலும், அரசாங்கம் அந்த நிதியைக் குறைக்கும் நடவடிக்கையையே மேற்கொண்டுள்ளதாக, கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
“தற்போது 1. 6 மில்லியன் மாணவர்களுக்கு மாத்திரமே பாடசாலை மதிய உணவு வழங்கப்படுகிறது. ஆனால், நாட்டில் சுமார் 4 மில்லியன் மாணவர்கள் உள்ளனர். இந்நிலையில், இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படவுமில்லை. அதேபோன்று, மதிய உணவுக்காக 100 ரூபாயே வழங்கப்படுகிறது. இந்த 100 ரூபாயைக் கொண்டு சிரமத்துடன் தான் மாணவர்களுக்கு இதை வழங்குகிறார்கள். எனவே, இந்தத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்றே கூறினோம். ஆனால், எமக்குத் தெரியவரும் மிகவும் கவலைக்குரிய விடயம்தான், கடந்த ஆண்டு மதிய உணவிற்காக 33.6 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆண்டு 30 பில்லியன் ரூபாயே ஒதுக்கப்பட்டுள்ளது.”
இலங்கையில் சிறுவர்கள் எதிர்கொண்டுள்ள போசணைக் குறைப்பாடு நிலையானது முக்கியப் பிரச்சினையாக சுகாதாரத் துறையினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில், சிறுவர்களுக்கான போஷாக்கு வேலைத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை எதிர்வரும் ஆண்டுக்காக குறைத்திருப்பது பாரதூரமான பிரச்சினையாகும் என ஆசிரியர் சங்கத் தலைவர் மேலும் வலியுறுத்தினார்.
“அப்படியானால் இந்த பிள்ளைகள், இலங்கையில் போசணைக் குறைபாடு ஒரு பிரதான பிரச்சினையாக மாறியுள்ளது என்பது எமக்கு தெரியும். எனவே போசணைக் குறைபாடு ஒரு பிரதான பிரச்சினை என சுகாதாரத் துறையினர் தெரிவிக்கும் நிலையில், இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் மதிய உணவு போசணைத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியைக் குறைத்திருப்பது பாரதூரமான பிரச்சினையாகும். அதிகரிக்க வேண்டும் என நாம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அதனை குறைப்பது பிரச்சினையாகும்.”
உலக வங்கியினால் கடந்த மாதம் வெளியிடப்பட்ட “பொருளாதார மீட்சியிலிருந்து கட்டமைப்பு மாற்றத்தை நோக்கி (From Recovery to Transformation) இலங்கையின் அபிவிருத்தி தொடர்பான அண்மைய அறிக்கையில், இலங்கையில் சிறுவர்கள் போசணைக் குறைபாடு மற்றும் வளர்ச்சி குன்றிய நிலைக்கு உள்ளாகும் வீதம் தொடர்ந்து உயர்ந்த மட்டத்தில் காணப்படுவது, நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடியின் நீண்டகாலத் தாக்கத்தைப் பிரதிபலிப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கைக்கு அமைய, 2023ஆம் ஆண்டில் 20.7 சதவீதமாக உயர்ந்திருந்த வறுமை நிலை , 2025ஆம் ஆண்டளவில் 16.9 சதவீதமாகக் குறையும் என மதிப்பிடப்பட்டிருந்தாலும், இது 2019ஆம் ஆண்டில் பதிவான 11.5 சதவீதத்தை விட உயர்ந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது.
குறித்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாவது, 2026ஆம் ஆண்டளவில் இலங்கையர்களில் 40 சதவீதமானோர் வறுமை அல்லது வறுமைக் கோட்டுக்கு அண்மித்த நிலையில் வாழ்கின்ற நிலையில், மக்களின் உண்மையான வருமானம் மேலும் வீழ்ச்சியடைந்தால், பெருமளவிலான மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய எச்சரிக்கை நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.










