மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்!

கடந்த பல வருடங்களாக நடத்தப்படாமல் உள்ள மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்றும், அதன் ஒரு கட்டமாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபடுவது பொருத்தமானதாக இருக்கும் என்றும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

“மாகாண சபை தேர்தல்களை நடத்தாமல் காலத்தை கடத்துவது என்பது மக்களின் இறையாண்மையை மீறும் செயலாகும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது தேர்தல் அறிக்கையில் மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது.

ஆனால், அவர்கள் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைவடையப் போகும் தருணத்திலும், மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு எவ்வித முனைப்பும் காட்டப்படவில்லை. மாறாக, தேர்தலை மேலும் தாமதப்படுத்துவதற்கான காரணங்களைத் தேடுவதிலேயே அரசாங்கம் நாட்டம் காட்டி வருகிறது.

தற்போது மாகாண சபைகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லையே தவிர, ஏனைய அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் ஆளுநர்களின் அதிகாரத்தின் கீழ் தடையின்றி நடைபெற்று வருகின்றன.

ஒன்பது மாகாண சபைகளிலும் கடைநிலை ஊழியர்கள் முதல் அமைச்சின் செயலாளர்கள் வரை அனைவரும் பணியில் உள்ளனர்; அவர்களுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, மாகாண சபைகள் என்பது வீண் செலவை ஏற்படுத்தும் நிறுவனங்கள் என எவராலும் விரல் நீட்ட முடியாது.

மாகாண நிர்வாகமானது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுடன் இணைந்தே செயல்பட வேண்டும். மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநரோ அல்லது நிர்வாக அதிகாரிகளோ ஒட்டுமொத்தமாக மக்கள் சார்பாக நின்று செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. மக்கள் பிரதிநிதிகள் இல்லாத இந்த நிலைமை மிகப்பெரிய ஜனநாயக மீறலாகும்.

குறிப்பாக, சிறுபான்மை மக்களின் தேவைகளும் அபிலாஷைகளும் புறக்கணிக்கப்படுகின்ற போது, அதைச் சுட்டிக்காட்டி உரிய தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு மக்கள் பிரதிநிதிகள் அவசியமாகின்றனர். மக்கள் பிரதிநிதிகளுடன் மாகாண சபைகள் இயங்கிய போது காணப்பட்ட செயல்திறன், தற்போது இருக்கிறதா என்பது பெரும் கேள்விக்குறியே.

மாறி மாறி வரும் அரசாங்கங்கள், தங்களின் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்குச் சாதகமான சூழல் இல்லை என்று கருதினால், தேர்தல்களைப் பின்போடுவதிலேயே நாட்டம் செலுத்துகின்றன.

இவ்வாறானதொரு மோசமான நிலைமைக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் குறுக்கு வழிச் சிந்தனையே வித்திட்டது. மாகாண சபை தேர்தலில் தமது அரசு தோல்வியடையும் என்ற அச்சத்தினால், தேர்தலை ஒத்திவைப்பதற்காக ‘தேர்தல் முறை மாற்றம்’ என்ற ஆயுதத்தை அவர் கையில் எடுத்தார்.

அக்காலப்பகுதியில், நாட்டின் சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்குப் பங்களிப்பு வழங்கியதே இந்த இழுபறிக்கு முக்கிய காரணமாகும். இன்று மாகாண சபை தேர்தல்களை நடத்தும்படி அரசிடம் கோரிக்கை விடுத்து நிற்கும் வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் முஸ்லிம் கட்சிகள் அன்று அந்த தேர்தல் முறை மாற்றச் சட்டத்திற்கு ஆதரவளித்து, அச்சட்டமூலத்திற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றுக்கொடுத்தன.

இந்த நாட்டின் சிறுபான்மை மக்கள் தங்களுக்கு இருக்கும் உரிமைகளில் எதையாவது இழந்தால், அதனை மீண்டும் பெற்றுக் கொள்வது குதிரைக் கொம்பாகவே அமையும் என்பதற்கு இந்த மாகாண சபை தேர்தல் சட்டமூலமும் ஒரு சிறந்த உதாரணமாகும்.

இருப்பினும், தற்போதைய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து எதிர்க்கட்சிகளும் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்ற ஒரே நிலைப்பாட்டில் ஒன்றுபட்டுள்ளன. இந்தச் சாதகமான சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அரசாங்கத்திற்குப் பெரும் அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும். அதற்காக, எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து பாராளுமன்றத் தொடரைத் தொடர்ச்சியாகப் புறக்கணிப்பது அரசாங்கத்திற்கு மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுப்பதற்கு வழிவகுக்கும்” என கணபதி கனகராஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles