ஹட்டன் பிரகடனத்துக்கு என்னாச்சி? துரைமாரின் அட்டூழியத்துக்கு முடிவு கட்டுங்கள்!

ஹட்டன் பிரகடனத்துக்கு என்னாச்சி? துரைமாரின் அட்டூழியத்துக்கு முடிவு கட்டுங்கள்!

பெருந்தோட்டங்களை மீண்டும் குத்தகைக்கு வழங்கும் விடயத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு ஆட்சேபனை இல்லை என்றாலும், அந்த நடவடிக்கை முறையாகக் கையாளப்பட வேண்டும் என அக்கூட்டணியின் உப தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், பெருந்தோட்டப் பகுதிகளில் தோட்ட நிர்வாகத்தினரின் அட்டூழியங்களும் அராஜகங்களும் அதிகரித்து வருவதாகக் குற்றஞ்சாட்டினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தோட்டப்பகுதிகளில் துரைமாரின் அட்டூழியங்களும் அராஜகங்களும் அதிகரித்துள்ளன. பெருந்தோட்ட மக்களுக்கு எவ்வித சலுகைகளும் வழங்கப்படுவதில்லை. வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படுவதில்லை. காணி உரிமை தொடர்பிலும் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.

எனவே, பெருந்தோட்டங்களை மீண்டும் குத்தகைக்கு வழங்குவதாக இருந்தால், தோட்ட நிறுவனங்களுக்கு முறையாகத் தோட்டங்களை மாத்திரம் வழங்குங்கள். மக்களின் பிரச்சினைகளை அரசாங்கமே பொறுப்பேற்றுத் தீர்க்க வேண்டும்.

தோட்டத்தில் எவ்வாறு கோவில் அமைக்கப்பட்டது என தோட்ட நிர்வாகத்தினர் கேள்வி எழுப்புகின்றனர். மக்களின் வீடுகள் உடைக்கப்படுகின்றன. தோட்டக் கம்பனிகள் முன்னெடுக்கும் இத்தகைய அராஜக நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டும்.

ஹட்டன் பிரகடனம் நிறைவேற்றப்பட வேண்டும். அதில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

தரிசு நிலங்களை வெளியாருக்கு வழங்குவதற்கு அரசாங்கம் முற்படுகின்றது. இது முற்றிலும் தவறான நடவடிக்கையாகும். முதலில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அந்தக் காணிகளை வழங்க வேண்டும். எஞ்சிய காணிகள் தொடர்பில் பின்னர் சிந்திக்கலாம்” எனத் தெரிவித்தார்.

…………….

விமல் வீரவன்சவின் மனைவிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதியானது

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி ஷஷி வீரவன்சவுக்கு, முறைகேடான இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டில் விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

தனக்கு எதிராக வழங்கப்பட்ட குற்றத்தீர்ப்பை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை உச்ச நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முறைகேடான இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஷஷி வீரவன்ச குற்றவாளியாகக் காணப்பட்டதையடுத்து, 2022ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார். எனினும், 2026ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதி அவரது மேன்முறையீட்டை மேல் நீதிமன்றம் நிராகரித்ததுடன், நீதவான் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் தண்டனையையும் உறுதிப்படுத்தியது.

இதனையடுத்து, மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை இரத்துச் செய்யக் கோரி அவர் உச்ச நீதிமன்றத்தை நாடினார்.

இந்நிலையில், அவரது மேன்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதனை நிராகரித்துள்ளது. இதன்மூலம், ஷஷி வீரவன்சவுக்கு எதிரான குற்றத்தீர்ப்பும் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

……….

ஞானசார தேரரின் விடுதலைக் கோரிக்கை நிராகரிப்பு – 4 ஆண்டு சிறைத்தண்டனை உறுதி

இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்ட குற்றச்சாட்டில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையிலிருந்து விடுதலை செய்யுமாறும், குற்றவாளி என்ற தீர்ப்பை இரத்துச் செய்யுமாறும் கோரி ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி கிருலப்பனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், குரகல விகாரை தொடர்பாக அவர் வெளியிட்ட கருத்துகள் தொடர்பில் சட்டமா அதிபரால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையிலும், வெவ்வேறு இன மற்றும் மத சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் கருத்துகளை வெளியிட்டதாக அவருக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டது.

குற்றச்சாட்டுகளை விசாரித்த கொழும்பு மேல் நீதிமன்றம், 2024ஆம் ஆண்டு ஞானசார தேரரை குற்றவாளியாகக் கண்டு நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்தது.

இதனை எதிர்த்து அவர் மேன்முறையீடு செய்திருந்த நிலையில், தற்போது அந்த மேன்முறையீட்டை நிராகரித்துள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை உறுதிப்படுத்தியுள்ளது.

……….

சுகீஷ்வர பண்டாரவுக்கு பிணை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஷ்வர பண்டாரவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

ஜனாதிபதியின் செலவுத் தலைப்பின் கீழ் இரண்டு வெவ்வேறு பதவிகளுக்கான சம்பளத்தை ஒரே நேரத்தில் பெற்றுக்கொண்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவர் தாக்கல் செய்த பிணை மனுவை பரிசீலிப்பதற்காக நவம்பர் 18ஆம் திகதியை நீதிமன்றம் ஏற்கனவே நிர்ணயித்திருந்தது.

அதன்படி, இன்று அவரது பிணை மனுவைப் பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கியுள்ளது.
………

ராஜாங்கன தேரர் கைது!

அநுராதபுரத்தில் இடம்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தின்போது குழப்பமான முறையில் நடந்துகொண்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில், ராஜாங்கன சத்தரதன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (18) அநுராதபுரம் பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட அவர், அங்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த நவம்பர் 12ஆம் திகதி, அநுராதபுரம் புனித நகரப் பகுதியில் அமைந்துள்ள ருவன்வெலிசாய தூபிக்கு அருகில் நடைபெற்ற போராட்டத் தளத்தில் இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்தே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சிலர், குறித்த இடத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, வண. ராஜாங்கனே சத்தரதன தேரர் தலைமையிலான குழுவினர் அங்கு வருகை தந்துள்ளனர். இதன்போது இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் மோதலாக மாறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மோதலின்போது ராஜாங்கன சத்தரதன தேரரின் தலையில் காயம் ஏற்பட்டதையடுத்து, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பலரைக் கைது செய்து பொலிஸ் காவலில் எடுத்திருந்தனர்.

………

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles