சிங்கப்பூர் அரசியல் தலைவர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
உலகிலேயே சிங்கப்பூர் அமைச்சர்களுக்கே அதிக சம்பளம் வழங்கப்பட்டுவரும் நிலையில்,இத்தீர்மானம் மூலம் மேலும் 60 சதவீதத்திற்கும் மேல் சம்பளம் உயர்த்தப்படவுள்ளது.
அரசியல் தலைவர்களுக்குக் கூடுதல் சம்பளம் வழங்குவது திறமையாளர்களை ஈர்க்கவும் நல்லாட்சியை உறுதி செய்யவும் உதவும் எனச் செல்வந்த நாடான சிங்கப்பூர் நியாயப்படுத்தியுள்ளது.
இருப்பினும், அமைச்சர்களின் வருமானம் சாதாரண குடிமக்களின் வருமானத்தை விடப் பெருமளவில் அதிகமாக இருப்பதால், இப் பிரச்சினை அரசியல் ரீதியாக மிகவும் உணர்வுபூர்வமான ஒன்றாகவே உள்ளது.
இந்த ஊதிய மாற்றத்தின் மூலம் தனது ஆண்டு அடிப்படைச் சம்பளம் (benchmark salary) 2.2 மில்லியன் சிங்கப்பூர் டாலரிலிருந்து 1.7 மில்லியன் அமெரிக்க டாலர் (3.6 மில்லியன் சிங்கப்பூர் டாலர்) ஆக உயரும் என்று வோங் குறிப்பிட்டார்.
துணைப் பிரதமரின் அடிப்படைச் சம்பளம் 1.87 மில்லியன் சிங்கப்பூர் டாலரிலிருந்து 3.06 மில்லியன் சிங்கப்பூர் டாலராக உயரும்.
அதேவேளையில், அமைச்சரவை அமைச்சர்கள் தங்களது மூப்பு மற்றும் வகிக்கும் பொறுப்புகளின் அடிப்படையில் 1.80 மில்லியன் முதல் 2.88 மில்லியன் சிங்கப்பூர் டாலர் வரை பெறுவர்.
தனது பதவிக் காலத்தில், உயர்த்தப்படும் முழுத் தொகையையும் “பொருத்தமான நற்பணிகளுக்கு” நன்கொடையாக வழங்கத் திட்டமிட்டுள்ளதாக லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
இந்த உயர்வுக்கு முன்பேகூட, சிங்கப்பூர் பிரதமரின் சம்பளம் அமெரிக்கா மற்றும் ஜி7 (G7) உறுப்பு நாடுகள் உட்படப் பல உலகத் தலைவர்களின் ஊதியத்தை விடப் பல மடங்கு அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
“அரசியல்வாதிகளின் சம்பள விவகாரம் என்பது மிகவும் கடினமான மற்றும் உணர்வுபூர்வமான விஷயம்” என்று சிங்கப்பூர் நாடாளுமன்றம் மற்றும் 21 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையை வழிநடத்தும் நீண்டகால ஆளும் ‘மக்கள் செயல் கட்சியின்’ (People’s Action Party) தலைவரான வோங் கூறினார்.
கடைசியாக 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சர்களின் சம்பளத்தைச் சீரமைத்த இந்தத் தென்கிழக்காசிய நாடு, உலகின் ஊழலற்ற நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது.
ஒரு சுயாதீனக் குழுவின் பரிந்துரையின் பேரிலேயே இந்தச் சம்பள உயர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த வோங், தற்போதைய பதவிகளில் உள்ளவர்களுக்கு உடனடியாக இந்த புதிய சம்பள அளவு முழுமையாக வழங்கப்படாது என்றும் தெரிவித்தார்.
அவர்களின் தனிப்பட்ட செயல்பாடுகள் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில், அக்டோபர் 15 முதல் 9 சதவீதம் வரை ஒரே கட்டமாகச் சம்பளச் சீரமைப்பு செய்யப்படும்.
“அதைத் தொடர்ந்த மாற்றங்கள் அனைத்தும் தனிப்பட்ட நபரின் செயல்பாடு மற்றும் பொறுப்புகளின் அடிப்படையிலேயே அமையும்” என்றும் லாரன்ஸ் வோங் கூறினார்.










