2024 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிலுள்ள மூன்று பிரதான அதிவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். ஐவர் காயம் அடைந்துள்ளனர்.
சாரதிகளின் கவனயீனம் உள்ளிட்ட விடயங்கள் விபத்துக்கள் இடம்பெற பிரதான காரணங்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளாரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார்.
நாட்டில் மூன்று பிரதான அதிவேக நெடுஞ்சாலைகள் உள்ளன. அவை தெற்கு அதிகவேக நெடுஞ்சாலை, வெளிச்சுற்றுவட்ட அதிகவேக நெடுஞ்சாலை மற்றும் கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை ஆகியனவாகும். இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இந்த மூன்று பிரதான அதிகவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அத்துடன் இந்த விபத்துக்கள் இடம்பெற இரண்டு பிரதான காரணங்கள் என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளது. குறிப்பாக கவனயீனமான முறையிலும் சாரதி அதிக களைப்புடனும் வாகனம் செலுத்துகின்றமை இந்த விபத்துக்கள் இடம்பெற காரணமாகும்.
எனவே, சாரதிகள் அதி வேக நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்தும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நாம் கோரிக்கை விடுக்கிறோம்.” -என்றார்.










