டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவான நிவாரண சேவைகளை முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய Inventory Control System ஒன்றை செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த கட்டமைப்பின் எதிர்கால செயற்பாடுகள் குறித்த விசேட கலந்துரையாடல் நேற்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றதுடன், ஜனாதிபதி அலுவலகம், பாதுகாப்பு அமைச்சு, தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையம் (NDRSC), டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் சயன்டர் டெக்னொலஜீஸ் (Scienter technologies) தனியார் நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி அலுவலகத்தின் பங்களிப்பின் கீழ் தேசிய அனர்த்த நிவாரண சேவை மையத்திற்கு (NDRSC) அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் புதிய மென்பொருள் கட்டமைப்பின் மூலம் அனர்த்த நிவாரணங்களை விநியோகிக்கும் செயல்முறை நெறிப்படுத்தப்படும்.
வெளிநாட்டு அரசாங்கங்கள், சர்வதேச நிறுவனங்கள், வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு நன்கொடையாளர்களிடமிருந்து கிடைக்கும் அனைத்து பொருள் உதவிகளையும் சேகரிப்பு முதல் இறுதிப் பயனாளிக்கான விநியோகம் வரை மிகச் சரியாக அறிக்கையிட்டு, நிர்வகிக்கும் திறனை இந்தக் கட்டமைப்பு
கொண்டுள்ளது.
இந்தக் கணனிக் கட்டமைப்பு மூலம் வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் நிதி அல்லாத வெளிநாட்டு உதவிகள் முழுமையாக கணனி மயப்படுத்தப்படுவதுடன், அந்தப் பொருட்களின் விநியோக செயல்முறை, விமானம் அல்லது கப்பல் மூலம் பொருட்களைப் பெறுவதிலிருந்து உதவி தேவைப்படும் இறுதி நுகர்வோர் வரை கட்டமைப்பு ஊடாக கண்காணிக்கப்படுகிறது.
புதிய செயல்முறையின்படி, தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையத்திற்குச் சொந்தமான ஒருகொடவத்தை பிரதான களஞ்சியத்தில் உதவிப் பொருட்கள் சேமித்து வைக்கப்படுவதுடன், கிராம அலுவலர் பிரிவு மட்டத்தில் தேவைகளைக் கண்டறிந்த பின்னர், பிரதேச செயலாளர்களால் இந்த கட்டமைப்பின் மூலம் உதவிக்கான கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்படும்.
அந்தக் கோரிக்கைகள் மாவட்டச் செயலாளரால் நேரடியாக அனர்த்த நிவாரண சேவைகள் மையத்திற்கு அனுப்பப்படுவதோடு, பின்னர் குறித்த பொருட்கள் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேசச் செயலாளர்கள் ஊடாக சம்பந்தப்பட்ட கிராம அலுவலர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்படும்.
இந்த அனைத்து நடவடிக்கைகளையும் பற்றிய தகவல்கள் கட்டமைப்பில் பதிவு செய்யப்படுவதால், இந்தப் பணிகளுக்கு இடையிலான தாமதங்களைத் தவிர்த்து, அனர்த்தத்தினால் உண்மையிலேயே பாதிக்கப்பட்ட மக்களை நிவாரணம் சென்றடைவதை உறுதி செய்யவும், பெறப்பட்ட உதவிகள் குறித்து முழுமையான வெளிப்படைத்தன்மையைப் பேணவும் முடியும்.
இந்த மென்பொருள் கட்டமைப்பை சயன்டர் டெக்னொலஜீஸ் (Scienter Technologies) தனியார் நிறுவனம் முற்றிலும் இலவசமாக வழங்கியுள்ளது. இதற்கான தொழில்நுட்ப ஆதரவை ஓரெல் கிளவுட் (Orel Cloud) மற்றும் மைக்ரோசொப்ட் (Microsoft) நிறுவனம் இலவசமாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளன.
அதன்படி, அடுத்த வாரம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அனைத்து தரப்பினரும் இந்த கூட்டத்தில் ஒப்புக்கொண்டதுடன், கட்டமைப்பின் எதிர்கால மேம்படுத்தல் நடவடிக்கையாக, கிராம அலுவலர்கள் அனர்த்த நிலைமைகளை உடனடியாகத் தெரிவிக்க உதவும் தொலைபேசி செயலியை (Mobile App) இலவசமாக உருவாக்கவும் சயன்டர் டெக்னொலஜீஸ் நிறுவனம் இணக்கம் தெரிவித்தது.
