அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் புதிய ஏற்பாட்டாளர் விரைவில் நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகின்றது.
தற்போது ஏற்பாட்டாளராக செயற்படும் வசந்த முதலிகேவின் பதவி காலம் இன்றுடன் நிறைவடைந்தது.
கடந்த 14ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இடைக்கால அமர்வில் புதிய ஏற்பாட்டாளர் நியமனம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதன்படி புதிய நியமனம் எதிர்வரும் 20 ஆம் திகதி களனி பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது எனவும் தெரியவருகின்றது.
புதிய ஏற்பாட்டாளராக ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர் தலைவர் ஹேஷான் ஹர்ஷன அல்லது பேராதனை பல்கலைக்கழகத்தின் மதுஷன் சந்திரஜித் அல்லது திறந்த பல்கலைக்கழகத்தின் மொஹமட் ரிபாத் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் மூவரும் முன்னிலை சோசலிச கட்சியின் செயற்பாட்டாளர்கள் எனவும், பேராதனை, ரஜரட்டை, களனி, தென்கிழக்கு, கிழக்கு, வடமேற்கு பல்கலைக்கழகங்கள் மற்றும் திறந்த பல்கலைக்கழகத்தின் ஆதரவை பெற்றுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் சோசலிச மாணவர் சங்கமும் (SSU) ஏனைய பல்கலைக்கழகங்களின் உதவியுடன் பல்கலைக்கழகங்களில் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கான நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
எவ்வாறாயினும், புதிய அழைப்பாளர் நியமிக்கப்படும் வரை வசந்த முதலி தற்காலிக அழைப்பாளராக செயற்படுவார் என தெரியவருகின்றது.










