தெமோதர வெவலினா தோட்டத்தில் தோட்ட ஊழியர்களை இனவாத ரீதியாகவும், தரக்குறைவாகவும் பேசிய தோட்ட அதிகாரிக்கு எதிராக கடந்த நான்கு நாட்களாக தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
குறித்த அதிகாரிக்கு எதீராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தொழிலாளர்கள் வலியுறுத்திய போதிலும் இன்று காலை வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து குறித்த விவகாரம் பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு இன்று மாலை 5 மணியளவில் கொண்டுவரப்பட்டது.
உடனடியாக செயற்பட்ட செந்தில் தொண்டமான், தோட்ட முகாமையாளரை அழைத்து, தோட்ட ஊழியர்களை தரக்குறைவாக பேசிய தோட்ட அதிகாரிக்கு எதிராக சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். அத்துடன், குறித்த தோட்ட அதிகாரி மீதான குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்பட்டால் அவரை 24 மணி நேரத்திற்குள் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தோட்ட முகாமையாளருக்கு செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இன்று போயா விடுமுறை தினமாக இருந்த போதிலும், மூடியிருந்த அலுவலகம் திறக்கப்பட்டு, இதற்கான விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைளை எடுப்பதாகக் கூறி தோட்ட முகாமையாளர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.