2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – என்று ‘உத்தர லங்கா சபாகய’வின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச சூளுரைத்துள்ளார்.
2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் சபையில் முன்வைத்து உரையாற்றினார்.
இந்நிலையில் பாதீடு குறித்தும் அடுத்தக்கட்ட நகர்வுகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடுவதற்கு விமல் வீரவன்ச தலைமையிலான ‘உத்தர லங்கா சபாகய’ எனும் அரசியல் கூட்டணி நேற்று முன்தினம் இரவு கூடியது.
இதன்போது குறித்த பாதீட்டில் மக்கள் நலத்திட்டங்கள் இல்லை என்பதாலும், மேலும் சில காரணங்களை அடிப்படையாகக் கொண்டும் பாதீட்டுக்கு எதிராக வாக்களிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சந்திப்பின் பின்னர் இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட விமல் வீரவன்ச,
” பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி நாட்டு வளங்களை விற்பதற்கு ஜனாதிபதி முற்படுகின்றார். எனவே, இந்த பாதீட்டை தோற்கடிப்பதற்கு முயற்சி எடுக்கப்படும்.” – என்று குறிப்பிட்டார்.
அதேவேளை, பாதீட்டை தோற்கடிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சி நடவடிக்கை எடுக்குமானால் அதற்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
