ஆப்கானிஸ்தான் இனி நிதி ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியாது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
தலிபான் அமைப்பு அண்மையில் நாட்டைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, நிதியம் இதனை அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் அரசாங்கத்தை அங்கீகரிப்பதில், சர்வதேச சமூகத்துக்கு இடையே நிலவும் குழப்பமான நிலையே இதற்குக் காரணம் என நிதியம் குறிப்பிட்டது.
ஆப்கானிஸ்தான் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க, அதற்குச் சுமார் 370 மில்லியன் டொலர் நிதி அடுத்த வாரம் வழங்கப்படவிருந்தது. ஆனால், அது தற்போது தடைசெய்யப்பட்டிருப்பதாக நிதியம் தெரிவித்தது.
சர்வதேச நாணய நிதியம் தமது பெரும்பாலான உறுப்பு நாடுகள் அங்கீகரிக்காத அரசுகளுக்கு எதிராக இதற்கு முன்னரும் இது போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 2019 ஏப்ரலில் வெனிசுவேலாவுக்கு எதிராகவும் தற்போது மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராகவும் நிதியம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்ட கடன் தவணையை ஆப்கானுக்கு கடந்த ஜூன் மாதத்தில் சர்வதேச நாணய நிதியம் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.