ஆயர் யோசேப்பு ஆண்டகையின் வாழ்வும் பணிகளும்!

இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் 01.04.2021 நேற்று தனது 80ஆவது வயதில் இறைபதமடைந்தார்.

மன்னார் மறைமாவட்டத்தில் சுடர்விட்டுப் பிரகாசித்த ஒளிவிளக்கு இப்போது அணைந்து விட்டது. நலிந்த மக்களுக்காக ஓங்கி ஒலித்த குரல் இன்று அமைதியடைந்து விட்டது. மனித உரிமைகளின் காவலராக விளங்கிய துணிவுமிக்க ஒரு தலைவர் இன்று நீங்காத் துயில் கொண்டு விட்டார். அன்னாருக்கு எமது ஆழ்ந்த அஞ்சலிகளை சமர்ப்பிக்கின்றோம். அவரது ஆன்மா அமைதியில் இளைப்பாறுவதாக!

இரா. யோசேப்பு ஆண்டகை அவர்கள் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மன்னார் மறைமாவட்டம் சார்ந்த தனது சமயக் கடமைகளை செவ்வனே நிறைவேற்றினார். ஒரு மறைமாவட்டத்தில் ஆயர் செய்ய வேண்டிய பணிகளை அவர் முழுமையான உற்சாகத்தோடு செய்தார். திருப்பலி, திருவிழாக்கள், பங்குத்தரிசிப்புக்கள், ஆலோசனைகள், கூட்டங்கள், மாநாடுகள், ஆலய மற்றும் பங்குமனைக் கட்டுமானங்கள், ஏழைகளுக்கான உதவிகள் என அவர் தன் கடமைகளைச் சிறப்பாகச் செய்தார்.

இவர் மன்னார் மறைமாவட்ட ஆயராகப் பொறுப்பேற்ற பின்னர் மறைமாவட்டத்தை ஆன்மீக, ஒழுக்க, சமூக, பொருளாதாரத் துறைகளில் முன்னேற்ற பல்வேறு புதிய முயற்சிகளை முன்னெடுத்தார். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு மறைமாவட்ட மேய்ப்புப்பணி மாநாடுகளைக் கூட்டி குருக்கள், துறவியர், பொதுநிலையினர் என அனைத்துத் தரப்பினரின் ஆலோசனைகளைப் பெற்று, திட்டங்களைத் தீட்டி அவற்றை நடைமுறைப்படுத்த முயற்சித்தார்.

இவருடைய காலத்தில் மன்னார் மறைமாவட்டத்தில் பல புதிய பங்குகள் உருவாக்கப்பட்டன. இவர் மறைமாவட்டத்தைப் பொறுப்பெடுத்தபோது 15 பங்குகள் இருந்தன. இவர் ஓய்வுபெறும்போது 38 பங்குகளாக அவை அதிகரித்திருந்தன.

யுத்த சூழ்நிலையில் பல ஆலயங்கள், பங்குமனைகள் அழிக்கப்பட்டன அல்லது சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டன. பல ஆலயங்கள் மற்றும் பங்குமனைகள் கால நீட்சியினால் பழுதடைந்த நிலையில் இருந்தன. இவ்வாறான நிலையில் பல்வேறு தரப்பிலிருந்து உதவிகளைப் பெற்று புதிய ஆலயங்களை, புதிய பங்குமனைகளைக் கட்டி எழுப்ப இவர் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்.

பம்பைமடுவில் அன்னை திரேசாவின் அருட்சகோதரிகளை வரவழைத்து முதியோர் மற்றும் கைவிடப்பட்டவர்களைப் பராமரிக்க ஒரு இல்லத்தை ஆரம்பித்தார். முருங்கனில் டொன் பொஸ்கோ குருக்களை வரவழைத்து இளைஞர் யுவதிகளுக்கான தொழிற்பயிற்சிகளை வழங்க ஆவன செய்தார். அடம்பனில் இயேசு சபைக் குருக்களை வரவழைத்து அவர்களின் பணி மறைமாவட்டத்திற்கு கிடைக்க வழி செய்தார்.

இந்தியாவில் இருந்து பல புதிய பெண் துறவற சபைகளை மன்னார் மறைமாவட்டத்திற்கு வரவழைத்து இந்திய அருட்சகோதரிகளின் பணியை மக்கள் பெற வழிவகுத்தார். புதிதாக உருவாக்கப்பட்ட பங்குகளில் புதிய கன்னியர் மடங்களையும் ஏற்படுத்தி மக்களை ஆன்மீகத்திலும், ஒழுக்கத்திலும் வளர்க்கப் பாடுபட்டார். மடுத்திருப்பதியில் தியான இல்லம் ஒன்றைக் கட்டியெழுப்பி அதன் மூலம் மன்னார் மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் ஏனைய மறைமாவட்டத்தவர்களும் பயன்பெற வழிகோலினார்.

குருக்கள் துறவியர் நலனில் அக்கறையோடு செயற்பட்டார். பொதுநிலையினரின் உருவாக்கத்தில் அதிக கரிசனை எடுத்தார். திருச்சபையின் திருவழிபாடுகளை திருச்சபை ஒழுங்கு விதிகளுக்கு ஏற்ப நடத்தவேண்டுமென்பதை வலியுறுத்தினார். இவ்வாறு ஓர் ஆயர் என்ற வகையில் தனது மறைமாவட்டம் சார்ந்த கடமைகளில் அவர் அதிக ஈடுபாட்டோடு, அர்ப்பணிப்போடு உழைத்தார். இதை விட இலங்கை ஆயர் பேரவையில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பொறுப்புக்களை ஏற்றுச் சிறப்பாகச் செய்தார்.

கொடூரமான போர்ச் சூழலில் பல்வேறு நிலைகளில் துன்பங்களைச் சுமந்துநின்ற மக்களின் துயரங்களைத் துடைக்க அவர் அரும்பாடுபட்டார். சிறைகளில் வாடும் கைதிகளை அவர் அடிக்கடி சென்று பார்வையிட்டு அவர்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தார். அவர்களோடு தனிப்பட்ட தொடர்பாடல்களை வைத்திருந்தார். காணாமல் போனோர் சார்பாக நின்று அவர்களைக் கண்டுபிடிக்க அல்லது அவர்களின் கதியை வெளிக்கொணர ஓயாது உழைத்தார். யுத்தத்தால் தமது இடங்களை இழந்தவர்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுக்க முயற்சிகளை மேற்கொண்டார்.யுத்தத்தால் தொழில் வாய்ப்புக்களை இழந்தவர்கள் தொழில்களை ஆரம்பிக்க வேண்டிய உதவிகளைச் செய்தார்.

யுத்தத்தால் அங்கவீனர்களாக்கப்பட்டவர்களுக்கு வாழ்வுதய நிறுவனத்தின் உதவிக்கரம் பிரிவு மூலம் உதவிகளைப் புரிந்தார். வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள வரோட் நிறுவனத்தின் ஊடாகவும் இவர்களின் புனர்வாழ்வுக்காகப் பாடுபட்டார். யுத்தத்தாலும், சுனாமியினாலும் பெற்றோரை இழந்து ஆதரவற்று நின்ற பெண் சிறார்களுக்கு வவுனியாவில் சலேசிய அருட்சகோதரிகளின் பராமரிப்பில் ஒரு இல்லத்தை ஆரம்பித்தார். அதேபோல் மன்னாரிலும் ஆண் சிறார்களுக்கான ஓர் இல்லத்தை ஆரம்பித்தார். இவ்வாறு இன்னும் பல துயர்துடைப்புப் பணிகளை முன்னெடுத்தார்.

விமானக் குண்டுத் தாக்குதல்கள், எறிகணைத் தாக்குதல், கண்ணிவெடித் தாக்குதல்கள் என எப்படியான அனர்த்தங்கள் இடம்பெற்றாலும் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற முதல் ஆளாக களத்திற்கு விரைந்து சென்றார். காயப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார். இழப்பின் சோகத்திலும், அச்சத்திலும், ஆபத்திலும் இருந்த மக்களுக்கு தனது பிரசன்னத்தினால் ஆறுதலைக் கொடுத்தார். இதுபோன்று பல்வேறு சந்தர்ப்பங்களில் மக்கள்மேல் அக்கறையுள்ள ஓர் நல்ல ஆயனாக, அவர் அனர்த்தங்களின் செய்தியை அறிந்து ஆபத்துக்கள் மத்தியில் களத்திற்கு விரைந்து சென்றார். போர்ச் சூழல் நிலவிய காலத்தில் ஆயர் யோசேப்பு ஆண்டகை குரலற்ற தமிழ் மக்களின் குரலாக ஒலித்தார். உண்மைகளை எடுத்துக்காட்டிய, நீதியை வலியுறுத்திய அவருடைய குரல் உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் ஓங்கி ஒலித்தது.

ஆட்சியில் இருந்த அரசுத் தலைவர்களை, அமைச்சர்களை மற்ற ஆயர்களுடனும், தனியாகவும் காலத்துக்குக் காலம் சந்தித்து மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைத்தார். தன்னைச் சந்திக்க வரும் அரசாங்க அமைச்சர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், ஐக்கியநாடுகள் சபையின் பல்வேறு பிரிவைச் சார்ந்த பிரதிநிதிகள் போன்றவர்களுக்கு களநிலமைகளை தெளிவாக விளங்கப்படுத்தினார். இவ்வாறு அவர் குரலற்ற மக்களின் குரலாக ஒலித்தார்.

ஆயர் யோசேப்பு ஆண்டகை இயல்பாகவே இறைவாக்கினருக்குரிய துணிவைப் பெற்றிருந்தார். துன்புறும் மக்களுக்காக இரங்கும் இரக்க உள்ளத்தையும் அவர் பெற்றிருந்தார். இவை அனைத்திற்கும் மேலாக காலத்தின் தேவைக்கு பதில் அளிக்க வேண்டிய ஒரு நல்ல திருச்சபைப் பணியாளனுக்குரிய தெளிவையும் அவர் கொண்டிருந்தார்.

தன் ஆடுகளுக்காக உயிர் கொடுத்த நல்லாயன் இயேசுவை அவர் தன் கண்முன் கொண்டிருந்தார். ஆயர் யோசேப்பு ஆண்டகை பணி செய்த காலம் ஓர் இக்கட்டான காலம். இப்படியான உயிராபத்து மிக்க ஒரு காலகட்டத்தில்தான் ஆயர் யோசேப்பு ஆண்டகையின் பணி நடைபெற்றது.

ஆயர் அவர்கள் மக்களின் அடிப்படைத் தேவைகள், நிவாரணம் வழங்கல், மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற விடயங்களில் அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து செயலாற்றினார். விடுதலைப் புலிகள், தமிழ் அரசியல் தலைவர்கள், அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் என அனைத்துத் தரப்பினருடனும் அவர் தொடர்பாடல்களை மேற்கொண்டிருந்தார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருடன் பல்வேறு தொடர்பாடல்களை, கலந்துரையாடல்களை மேற்கொண்டு தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை, அரசியல் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து ஆலோசித்தார். அதேபோன்று அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களோடும் நெருங்கியவிதமாகச் செயலாற்றினார். இதன் காரணமாக பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புக்களை, விமர்சனங்களை, கண்டனங்களை எதிர்கொண்டார்.

1992ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு நடுப் பகுதியில் அவர் சுகவீனமடையும் வரை இடைவிடாமல் தொடர்ச்சியாக இயங்கி வந்தார். திருச்சபையின் ஒழுங்குவிதிக்கு அமைய 75 வயது நிறைவில் தான் பணியிலிருந்து ஓய்வு பெறுவதாக திருச்சபைச் சட்ட எண் 401 பகுதி 1 இற்கு அமைவாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அறிவித்தார். 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் திகதி இவருடைய பணி ஓய்வுக்கான கோரிக்கையை திருத்தந்தை ஏற்றுக் கொண்டார்.

ஆயர் அவர்கள் மக்கள் பணியில் தன்னை முழுமையாகக் கரைத்துக் கொண்டார். இரவு பகல், மழை, வெயில் பாராது நீண்ட பயணங்களை மேற்கொண்டார். கண் துஞ்சாது, பசி நோக்காது கருமமே கண்ணாகச் செயற்பட்டார்.

2014ஆம் ஆண்டு மன்னார் தமிழ்ச் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழாவின் நிறைவுநாள் நிகழ்வின் போது மன்னார் தமிழ்ச் சங்கம் ‘இனமான ஏந்தல்’ என்ற விருதை இவருக்கு வழங்கிக் கௌரவித்தது. 2015ஆம் ஆண்டு கொழும்புக் கம்பன் கழகம் இவருக்கு கம்பன் புகழ் விருதினை வழங்கிக் கௌரவித்தது.

ஈழத்துக் கத்தோலிக்க திருச்சபை, இன்னும் குறிப்பாக ஈழத்துத் திருச்சபையின் பணியாளர்கள் ஆயர் அவர்களுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்ற விழைய வேண்டும். காலத்தின் தேவைக்கு ஏற்ப துணிவோடு, உறுதியோடு செயலாற்ற வேண்டும். ஆயர் யோசேப்பு ஆண்டகையின் வாழ்வும் பணிகளும் இன்றைய, நாளைய தலத்திருச்சபைக்கு முன்னுதாரணமாக அமைய வேண்டும்.

Related Articles

Latest Articles