பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபாவை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பெற்றுக்கொடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட எம்.பியுமான மனோ கணேசன் வலியுறுத்தினார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேதன உயர்வு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் பெற்றுக்கொடுக்கப்படும் என்ற உறுதிமொழியை மலையகத்துக்கே வந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கினார். பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரணவும் வழங்கப்படும் எனக்கூறினார். அமரர் ஆறுமுகன் தொண்டமானும் அறிவிப்பு விடுத்தார். ஆனால் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. தொழில் அமைச்சர் தலையிட்டும் எதுவும் நடக்கவில்லை.
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் கனவுகூட அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபா என்பதாகும். இறுதிக்கிரியைகளில் பங்கேற்ற ஆளுங்கட்சி பிரமுகர்கள், நிச்சயம் ஆயிரம் ரூபா வழங்கப்படும் என உறுதியளித்தனர். அந்த உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக பிரதமர் முன்மொழிவு செய்தார். ஏதோ சம்பள உயர்வு கிடைத்துவிட்டதுபோல பட்டாசு கொளுத்தி கொண்டாடப்பட்டது. எதுவும் நடக்கவில்லை. தற்போது சம்பள உயர்வுக்கான நடவடிக்கையை எடுக்குமாறு தொழில் அமைச்சருக்கு, அமைச்சரவை பணித்துள்ளது. மாறாக இது சட்டரீதியில் எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல.
எது எப்படி இருந்தாலும் அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். நல்லாட்சியின்போது மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு நாம் பல நடவடிக்கைகளை எடுத்தோம். சம்பள உயர்வு விவகாரத்தில் விமர்சனம் இருக்கின்றது. அதனால்தான் இன்று எதிரணியில் இருக்கின்றோம். ஆளுங்கட்சியில் இருக்கும் இ.தொ.கா, சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அரசியிலிருந்து வெளியேற வேண்டும். இந்த அரசாங்கத்தின்கீழ் பெருந்தோட்டப்பகுதிகளில் எதுவும் நடக்கவில்லை. அடிக்கல் மட்டுமே நடப்படுகின்றது. இ.தொ.காவின் வகிபாகமும் பூஜ்ஜியமாகும்.” – என்றார்.