ஆளப்போகும் தாலிபான் – தலைமையேற்க போவது யார்?

தாலிபன்கள் கிட்டத்தட்ட ஆப்கானிஸ்தான் முழுவதையும் கைப்பற்றிவிட்டனர். ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியும், துணை அதிபர் அமிருல்லா சாலேயும் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர்.

இத்தகைய சூழ்நிலையில், ஆப்கானிஸ்தானின் தலைமைப்பொறுப்பு எந்த தாலிபன் தலைவரிடம் வரும்? இந்த கேள்விக்கான பதிலில் அதிகம் விவாதிக்கப்படும் இரண்டு பெயர்கள் முல்லா அப்துல் கனி பராதர் மற்றும் ஹிப்துல்லா அங்குந்த்ஃஸாதா.

இந்த இரண்டு தலைவர்கள் யார்? தாலிபன் அமைப்புக்குள் அவர்களின் பங்கு என்ன?

1994 ல் தாலிபனை உருவாக்கிய நான்கு பேரில் முல்லா அப்துல் கனி பராதரும் ஒருவர்.

2001 இல், அமெரிக்க தலைமையிலான படைகள் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து தாலிபன்களை ஆட்சியில் இருந்து அகற்றியபோது, அவர் நேட்டோ படைகளுக்கு எதிரான கிளர்ச்சியின் முக்கியத் தலைவராக இருந்தார்.

2010 பிப்ரவரியில், அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் நடத்திய கூட்டு நடவடிக்கையில், பாகிஸ்தானின் கராச்சியில் அவர் கைது செய்யப்பட்டார்.2012 வரை முல்லா பராதரைப் பற்றி அதிகம் தெரியவரவில்லை.

அந்த நேரத்தில், சமாதானப் பேச்சுவார்த்தையை ஊக்குவிக்க ஆப்கானிஸ்தான் அரசு விடுவிக்க முயன்ற கைதிகளின் பட்டியலில் பராதரின் பெயர் முக்கியமாக இருந்தது.

2013 செப்டம்பரில் அவர் பாகிஸ்தான் அரசால் விடுவிக்கப்பட்டார், ஆனால் அவர் பாகிஸ்தானில் தங்கினாரா அல்லது வேறு எங்காவது சென்றாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

முல்லா பராதர், தாலிபன் தலைவர் முல்லா முகமது உமரின் மிகுந்த நம்பிக்கைக்குரியவராக இருந்தார்.

அவர் கைது செய்யப்பட்டபோது தாலிபன்களின் இரண்டாவது உயர் தலைவராக இருந்தார்.

பராதரின் அந்தஸ்து கொண்ட ஒரு தலைவர், தாலிபன்களை சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த வற்புறுத்தக்கூடும் என்று ஆப்கானிஸ்தான் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் எப்போதும் நம்பினார்கள்.

2018 இல், கத்தாரில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தாலிபன் அலுவலகம் திறந்தபோது, அவர் தாலிபன்களின் அரசியல் குழுத்தலைவராக நியமிக்கப்பட்டார்.

முல்லா பராதர் எப்போதும் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு ஆதரவாக இருந்தார்.

1994 இல் தாலிபன் அமைப்பு உருவான பிறகு, அவர் ஒரு தளபதி மற்றும் செயல்திட்ட வகுப்பாளரின் பாத்திரத்தை ஏற்றுக்கொண்டார்.

முல்லா உமர் உயிருடன் இருந்தபோது, தாலிபன்களுக்கான நிதி திரட்டல் மற்றும் அன்றாட நடவடிக்கைகளின் பொறுப்பாளராக அவர் இருந்தார்.

ஆப்கானிஸ்தானில் நடந்த அனைத்துப் போர்களிலும் அவர் தாலிபன்களின் தரப்பில் தொடர்ந்து முக்கிய பங்கு வகித்தார், குறிப்பாக ஹெராத் மற்றும் காபூல் பகுதிகளில் தீவிரமாக செயல்பட்டார்.

தாலிபன்கள் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டபோது அவர் தாலிபனின் துணை பாதுகாப்பு அமைச்சராக இருந்தார்.

“அவருடைய மனைவி, முல்லா உமரின் சகோதரி. அவர் தாலிபன்களின் முழு பணத்தையும் கண்காணிக்கிறார். ஆப்கானிஸ்தான் படைகளுக்கு எதிரான மிக பயங்கரமான தாக்குதல்களை அவர் வழிநடத்தினார்,” என்று முல்லா பராதர். கைது செய்யப்பட்ட நேரத்தில், ஆப்கானிஸ்தான் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

தாலிபன்
மற்ற தாலிபன் தலைவர்களைப் போலவே, முல்லா பராதரும் ஐக்கிய நாடுகள் சபையால் தடை செய்யப்பட்டார். அவர் பயணம் செய்யவும், ஆயுதங்கள் வாங்கவும் தடை இருந்தது.

2010 இல் கைது செய்யப்படுவதற்கு முன்பு, அவர் குறிப்பிட்ட பொது அறிக்கைகளை வெளியிட்டார்.

2009 இல், அவர் நியூஸ்வீக் பத்திரிகைக்கு மின்னஞ்சல் மூலம் பதிலளித்தார்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் வளர்ந்து வரும் முன்னிலை குறித்து பதிலளித்த அவர், தாலிபன்கள் அமெரிக்காவிற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்த விரும்புவதாக கூறினார்.

எதிரிகள் எங்கள் நிலத்திலிருந்து அழிக்கப்படும்வரை, ஜிஹாத் (புனிதப்போர்) தொடரும் என்று அவர் கூறினார்.

முல்லா பராதர் 1968 இல் உருஸ்கான் மாகாணத்தின் டேராவுட் மாவட்டத்தின் விட்மாக் கிராமத்தில் பிறந்தார் என்று இன்டர்போல் தெரிவிக்கிறது.

அவர் துர்ரானி வகுப்பைச் சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது. முன்னாள் ஆப்கான் அதிபர் ஹமீத் கர்சாயும் இதே வகுப்பைச்சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 ஆப்கானிஸ்தான் தாலிபனின் தலைவர் ஹிப்துல்லா அங்குந்த்ஸாதா ஒரு இஸ்லாமிய அறிஞர். அவர் கந்தஹாரை சேர்ந்தவர். அவர்தான் தாலிபன்களின் திசையை மாற்றி அதன் தற்போதைய நிலைக்கு கொண்டு வந்தார் என்று நம்பப்படுகிறது.

தாலிபனின் வலுக்கோட்டையான கந்தஹாருடன் அவருக்கு இருந்த தொடர்பு, அங்கு செல்வாக்கை நிலைநாட்ட உதவியது.

1980 களில், அவர் சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் கிளர்ச்சியில் ஒரு தளபதியாக பணியாற்றினார். ஆனால் அவர் ஒரு ராணுவத் தளபதியை விட ஒரு மத அறிஞராக அங்கீகரிக்கப்பட்டார்.

ஆப்கானிஸ்தான் தாலிபனின் தலைவராக வருவதற்கு முன்பே அவர் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தார். மதம் தொடர்பான தாலிபனின் உத்தரவுகளை அவர்தான் அளித்துவந்தார்.

தண்டனை பெற்ற கொலைகாரர்களையும், சட்டவிரோத உடலுறவு கொண்டவர்களையும் கொல்லுமாறும், திருடியவர்களின் கைகளை வெட்டுமாறும் அவர் உத்தரவிட்டார்.

ஹிப்துல்லா அங்குந்த்ஃஸாதா, தாலிபன் தலைவர் அக்தர் முகமது மன்சூரின் கீழ் துணை தலைவராகவும் இருந்தார். 2016 மே மாதம் அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் மன்சூர் கொல்லப்பட்டார். மன்சூர் தனது உயிலில் ஹிப்துல்லாவை தனது வாரிசாக அறிவித்தார்.

பாகிஸ்தானின் குவெட்டாவில் ஹிப்துல்லாவை சந்தித்த உயர்மட்ட தாலிபன் தலைவர்கள் அவரை தங்கள் தலைவராக ஆக்கியதாக நம்பப்படுகிறது. அவரது நியமனத்திற்கு சட்டபூர்வமான அங்கீகாரம் உயில் கடிதத்தால் அளிக்கப்பட்டதாக, செய்தி முகமையான ஏஎஃப்பி தெரிவிக்கிறது.

இருப்பினும், அவரது தேர்வை ஒருமித்த முடிவு என்று தாலிபன்கள் கூறுகின்றனர்.

சுமார் அறுபது வயதான அவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை ஆப்கானிஸ்தானில் கழித்துள்ளார். குவெட்டாவில் உள்ள தாலிபன்களின் ஷுரா(ஆலோசனைக்குழு)வுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது.

ஹிப்துல்லா என்ற பெயரின் பொருள் ‘அல்லாவின் பரிசு’. அவர் நூர்சாய் வகுப்பைச் சேர்ந்தவர்.

Related Articles

Latest Articles