“இதொகா” பல்லவி பாடுவதை நிறுத்திவிட்டு மலையக மக்களுக்குச் சேவையாற்றுங்கள்

“அக்கரப்பத்தனை, டயகம பகுதியில் பல வருடங்களாக மக்கள் விவசாயம் செய்து வந்த காணியை மீளப் பெறுவதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளதாக அறியமுடிகின்றது. ஒப்பந்தம் ஒன்றின் மூலமாகவே விவசாயம் செய்பவர்களுக்கு இக்காணி வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்த ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளதாக நிர்வாகத் தரப்பில் கூறப்படுகின்றது. மக்களிடம் இருந்து இவ்வாறு காணியைப் பறிப்பது தவறான செயலாகும்.

இதனை உடனடியாகச் சரிசெய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் (இதொகா) பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நாம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பும்போது, ‘இவ்வளவு காலம் நீங்கள் என்ன செய்தீர்கள்?’ என்று ஆளுங்கட்சியைச் சேர்ந்த நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்ன செய்தது என்பதை மலையக மக்களிடம் நேரில் சென்று கேட்டுப் பாருங்கள்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் 55 தொழிற்சாலைகளை எரிக்கவில்லை. கலவர காலங்களில் மலையகத்தைச் சௌமியமூர்த்தி தொண்டமானே பாதுகாத்தார். எனவே, எங்களை விமர்சிப்பதிலேயே நேரத்தைச் செலவிடாமல் மக்களுக்குச் சேவையாற்றுங்கள். நாம் தற்போது ஆளுங்கட்சியில் இல்லை, எதிர்க்கட்சியிலேயே இருக்கின்றோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.

Related Articles

Latest Articles