இலங்கை வரலாற்றை ஆய்வுசெய்ய விரைவில் புதிய நிறுவனம்!

இலங்கையின் வரலாற்றை ஆய்வு செய்வதற்காக புதிய நிறுவனமொன்று விரைவில் ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய அருங்காட்சியகம், ஆவணக் காப்பகத் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், கலாசார முக்கோணம், பல்கலைக்கழகங்கள் மற்றும் றோயல் ஆசிய சங்கம் என்பனவற்றை இணைத்து நிறுவி, அதற்கான சட்ட வரைவை நிறைவு செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற றோயல் ஆசிய சங்கத்தின் 178 ஆவது கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“ தற்போது, பலர் வரலாறு கற்பதில்லை. இப்போது வரலாறு வேறுபட்டது. வெவ்வேறு பதிப்புகள் உள்ளன. வரலாறு தமக்கான போக்கில் சென்றிருப்பது எல்லாவற்றையும் விட மோசமானது. எனவே நாம் அவர்களை மீண்டும் சரியான பாதையில் கொண்டு வந்து வரலாற்றுக்கு முன்னுரிமை வழங்கி செயல்படுத்த வேண்டும்.

மேலும், இது தொடர்பாக நிறைய வேலைகள் செய்ய வேண்டியுள்ளன. உங்கள் நூலகத்தின் முக்கிய குறைபாடான குளிரூட்டியை சீர் செய்ய வேண்டியது அவசியம். அதற்கு தேவையான பணத்தை அரசு வழங்கும். அதன் பிறகு, கடந்த ஆண்டுகளில் கொவிட் தொற்றுநோயால் நிறுத்தப்பட்ட கருத்தரங்குகளைத் தொடருங்கள். இது குறித்து உருவாக்கப்பட்டு வரும் புதிய கருத்தாடல்கள் மூலம் முதலீட்டு வாய்ப்புகளை வழங்க முடியும். எங்களாலும் அதற்கு உதவ முடியும்.

நூலகங்கள் என்று வரும்போது நிச்சயமாக புத்தகங்களைப் பாதுகாக்க பணம் வழங்கப்படும். அதன்பிறகு எங்கள் நிதியை வரலாற்று நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு பயன்படுத்துவோம். அது உங்கள் நிறுவனத்துடன் போட்டியிடும் ஒரு நிறுவனம் அல்ல. அந்த நிறுவனம் தேசிய அருங்காட்சியகம், தேசிய ஆவணக் காப்பகம், தொல்பொருள் திணைக்களம் மற்றும் கலாசார முக்கோணம், பல்கலைக்கழகங்கள் மற்றும் றோயல் ஆசிய சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படும். இந்த அனைத்து நிறுவனங்களையும் ஒன்றிணைக்கும் ஒரு மையத்தின் மூலம் நிறுவனங்களுக்கிடையேயான தொடர்பு மூலம் இந்த துறை தொடர்பான அறிவை மேலும் செழுமைப்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன்.

இலங்கையின் வரலாறு பற்றி மாத்திரமல்ல. கலாசாரத்திலும் கவனம் செலுத்த வேண்டும். வரலாறு மற்றும் கலாசாரத்தை எவ்வாறு ஆய்வு செய்வது? அந்த விடயங்களுடன் தொடர்புடைய கடந்த காலம் எங்குள்ளது என்பதை இங்கு கண்டறிய முடியும்.

இறுதியாக, இந்த துணைக்கண்டத்தின் வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட எந்தவொரு பிரச்சினையான தகவலையும் ஆராய்ந்து தீர்க்கும் ஆற்றலை இது ஏற்படுத்தும். மேலும், இந்த செயற்பாடுகளை மேலும் நடைமுறைப்படுத்துவதில் தடைகள் இருப்பின், பௌத்த விவகார அமைச்சு உங்களுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கும்.” – என்றும் ஜனாதிபதி கூறினார்.

 

Related Articles

Latest Articles