நாட்டில் வருடாந்தம் வீதி விபத்துக்களினால் சுமார் மூவாயிரம் பேர் உயிரிழப்பதுடன் 20 ஆயிரம் பேர் காயங்களுக்குள்ளாவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அவர்களில் 15 ஆயிரம் பேர் அங்கவீனர்களாகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
அண்மைக்காலங்களில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்திருந்தபோதும் தற்போது வீதி விபத்துக்கள் மீண்டும் அதிகரித்து வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை ஆரம்பிப்பதற்கு முன் கடந்த அக்டோபர் 4 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டில் 7 அல்லது 8 பேர் தினமும் வீதி விபத்துக்களில் உயிரிழந்தனர். எனினும் அதற்கு பின்னர் அந்த எண்ணிக்கை குறைவடைந்து வந்துள்ளது.
அதேவேளை கடந்தசில தினங்களாக வீதி விபத்துக்கள் மீண்டும் அதிகரித்துக் காணப்படுகின்றன.அதற்கிணங்க தினமும் பத்துக்கு மேற்பட்ட விபத்துக்கள் தற்போது இடம்பெறுவதை காண முடிகின்றது. அதனை தவிர்த்துக் கொள்வதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். ” – என்றார்.