உடப்புஸ்ஸலாவை நகருக்கு பஸ் தரிப்பிடம் அவசியம் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நுவரெலியா மாவட்டம் வலப்பனைபிரதேச சபைக்கு உட்பட்ட உடப்புஸ்ஸலாவை நகரம் பழமை வாய்ந்த நகரமாகும். இருப்பினும் இந்த நகரம் வலப்பனை பிரதேச சபைக்கு வரி வருமானத்தை ஈட்டித்தரும் பிரதான நகரமாக காணப்படுகின்ற போதிலும் இந்த நகரில் பஸ் தரிப்பிடம் இதுவரை அமைக்கப்படாமல் இருப்பது பாரிய குறைப்பாடாக காணப்படுகிறது.
வலப்பனை பிரதேச சபைக்கு உட்பட்ட வலப்பனை, நில்தண்டாஹின்ன, ருப்பஹா, இராகலை போன்ற நகரங்களில் இராகலை மற்றும் உடப்புஸ்ஸலாவை ஆகிய இரண்டு நகரங்கள் தோட்டப்பகுதிகளை உள்ளடக்கிய நகரமாகவும் தோட்ட மக்களுக்கு பிரதான நகரமாகவும் திகழ்கின்றது.
அந்த வகையில் உடப்புஸ்ஸலாவை பிரதான நகரில் இருந்து வெளிமடை பிரதேசத்திற்கும்,இராகலை வழியூடாக நுவரெலியா பிரதேசத்திற்கும் மட்டுமல்லாது வலப்பனை ஊடாக கண்டிக்கும் செல்ல முடியும்.
இவ்வாறான நிலையில் உடப்புஸ்ஸலாவை நகருக்கு வருகை தந்து தூரத்து பிரதேசங்களுக்கு பயணிப்பதற்கு தனியார் மற்றும் அரச பஸ்கள் சேவையில் ஈடுப்படுகின்றன. இருந்தபோதிலும் இந்த நகரில் பயணிகள் காத்திருந்து பஸ்களில் ஏறிச்செல்ல தரிப்பிடம் இல்லை என்பது பாரிய குறைப்பாடாக காணப்படுகின்றது.
இவ்வாறு பஸ் தரிப்பிடம் இல்லாத உடப்புஸ்ஸலாவை நகரில் பயணிகள் மழைக் காலங்களிலும், வெய்யில் காலத்திலும் நகரின் கடைகளை நம்பி பேரூந்துக்கு காத்திருக்க வேண்டிய அவலம் தொடர்ச்சியாக இருப்பதாக பயணிகள் மற்றும் பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
