ஐக்கிய மக்கள் சக்தி பாரம்பரிய எதிர்க்கட்சியாக இல்லாது ஒரு நவீனத்துவ, மக்கள் சார்பு எதிர்க்கட்சியாகச் செயற்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் எந்த எதிர்க்கட்சியும் நடைமுறையில் நலன்புரி் மற்றும் பொதுச் சேவையில் ஈடுபடவில்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தி இந்த சம்பிரதாயத்தை மாற்றியமைத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் எதிர்கட்சியாக இருந்த போது எதிர்ப்புகள் மற்றும் வேலைநிறுத்தங்கள் தவிர வேறு எந்தப் பொதுச் சேவையாவது செய்ததா எனக் கேட்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி இதுபோன்ற சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட மாட்டாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற கிராமத்துக்குக் கிராமம் வீட்டுக்கு வீடு மக்கள் பிரச்சினைகளை ஆராயும் “சத்காரய” எதிர்க்கட்சித் தலைவரின் நடமாடும் சேவை நிகழ்ச்சித் திட்டத்தின் போது புத்தல வகுருவெல ஸ்ரீ போயமலு ரஜமகா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ஞானானந்த தேரர் உட்பட விகாரையின் நிருவாக சபையின் வேண்டுகோளுக்கு அமைவாக பிரதேச மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் பங்களிப்புடன் நவலோக நிறுவனத்தின் நிதி உதவியில் 28 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த நீர் சுத்தீகரிப்பு இயந்திரமொன்று எதிர்க்கட்சித் தலைவரினால் நேற்று (19) மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தி நாட்டுக்கான சேவையையே நடைமுறைப்படுத்துகின்றது எனவும் அரசியல் என்பது நாட்டை ஆள்வதாகும் ஆனால் நாட்டுச் சேவை என்பது நாட்டிற்கான சேவையாகும் என இந் நிகழ்வில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நமது நாடு எதிர்நோக்கியுள்ள இந்தப் பேரழிவிலிருந்து காப்பாற்ற பாரம்பரிய தனிமனித அரசியல் மட்டும் வழி அல்ல என்றும், பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்த நாட்டை, சமூகரீதியாக வீழ்ச்சியடைந்த நாட்டை மீட்க வழி, நாட்டுக்கான சேவையே என்றும் அவர் கூறினார்.
தூரநோக்கற்ற அரசாங்கம் மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியபோது, ”எதிர்க்கட்சியின் மூச்சு” திட்டத்தின் மூலம் ஐக்கிய மக்கள் சக்தி உயிர்களைக் காப்பாற்றியது எனவும் இன்று, விவசாயிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என ஒட்டுமொத்த நாட்டையும் பேரழிவு தரும் நிலைக்கு தள்ள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றார் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
