பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் (OPEC) அமைப்பிலிருந்து வெனிசுலா மற்றும் ஈராக் ஆகிய நாடுகள் வெளியேற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் அழுத்தம் கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இரு நாடுகளிடமும் அமெரிக்க அதிகாரிகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாக, விடயம் தொடர்பில் அறிந்த 10 பேரை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இரு நாடுகளும் ஒபெக் அமைப்பிலிருந்து வெளியேறினால், எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் முதலீடுகளை விரிவுபடுத்துவதற்கும் வாய்ப்பு ஏற்படும் என அமெரிக்கா கருதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, ஒபெக் அமைப்பின் உற்பத்தி ஒதுக்கீடுகள் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் அமெரிக்காவின் திட்டங்களுக்கு தடையாக அமையலாம் என அமெரிக்க அதிகாரிகள் அச்சம் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
வெனிசுலா மீதான அமெரிக்காவின் அழுத்தம் அதிகரித்த நிலையில், அந்த நாடு ஒபெக் அமைப்புக்கான வருடாந்த உறுப்பினர் கட்டணத்தைச் செலுத்துவதற்கும் அமெரிக்கா தடையாக இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தலையிட்டு, வெனிசுலா ஒபெக் அமைப்பிலிருந்து வெளியேற வேண்டும் என்ற அழுத்தத்தைத் தொடர வேண்டாம் என அமெரிக்க நிர்வாகத்திடம் வலியுறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மறுபுறம், ஈராக் பிரதமர் அலி ஃபாலே அல்-சைதி, அமெரிக்க அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளின் பின்னர் ஒபெக் அமைப்பிலிருந்து வெளியேறுவது தொடர்பான சாத்தியக்கூறுகளை முன்வைத்திருந்தார்.
எனினும், ஈராக் எண்ணெய் அமைச்சு இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன், அமைப்பிலிருந்து வெளியேறுவதற்குப் பதிலாக எண்ணெய் உற்பத்திக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க முயற்சிக்குமாறு பிரதமருக்கு ஆலோசனை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
ஒபெக் அமைப்பிலிருந்து 2019ஆம் ஆண்டுக்குப் பின்னர் அங்கோலா, ஈக்குவடோர், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட நாடுகள் வெளியேறியுள்ள நிலையில், இந்த விவகாரம் அமைப்பின் ஒற்றுமைக்கு மேலும் சவாலாக அமையக்கூடும் எனக் கருதப்படுகிறது.
எவ்வாறாயினும், வெனிசுலா மற்றும் ஈராக் தொடர்பான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளில் ஒபெக் அமைப்பிலிருந்து வெளியேறுவது குறித்து விவாதிக்கப்படவில்லை என அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.










