கசிப்பு ஏற்றிச்சென்ற இருவர் லுணுகலை பொலிஸாரால் கைது

35000 மில்லி லீற்றர் கசிப்பு ( ஸ்பிரிட்) ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

18,35 வயதுடைய ஹொப்டன் பங்களா பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

லுணுகலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய யப்பாம விகாரைக்கு அருகாமையில் முச்சக்கர வண்டியை நிறுத்தி சோதனைக்கு உட்படுத்திய போது 35000 மில்லி லீற்றர் கசிப்பு (ஸ்பிரிட்) மற்றும் 2 எரிவாயு சிலிண்டர்கள், கேஸ் அடுப்பு ஒன்றும், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நீர்க் குழாய் , (தகர) மற்றும் பரல்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஹொப்டன் பங்களா பிரிவில் அதிக அளவில் கசிப்பு விற்பனையில் சிலர் ஈடுபடுவதாகவும் இதனால் பொதுமக்கள் பாரிய அளவில் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் பாடசாலை மாணவர்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மதுபான கடைகள் மூடப்படும் தினங்களில் பாரிய அளவு கசிப்பு விற்பனையில் ஹொப்டன் பங்களா பிரிவில் விற்பனையில் ஈடுபடுவதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles