“ கச்சத்தீவை மீளப்பெறுவது தொடர்பில் இந்தியாவில் கருத்தாடல் இடம்பெறவில்லை. கச்சத்தீவு பிரச்சினை இற்றைக்கு 50 வருடங்களுக்கு முன்னரே தீர்க்கப்பட்டுவிட்டது. அது பற்றி தற்போது மீண்டும் கலந்துரையாடல் அவசியம் இல்லை.”
இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கச்சத்தீவு விவகாரமும் அந்நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ கச்சத்தீவை மீட்பது தொடர்பில் கருத்தாடல் இடம்பெறவில்லை. கச்சத்தீவை வழங்கியது தொடர்பில் யார் பொறுப்பு கூறவேண்டும் என்பது அந்நாட்டில் (இந்தியாவில்) உள்ளக அரசியல் களத்தில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. இதன்போது கச்சத்தீவை மீள பெறுவது தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்படவில்லை.
இற்றைக்கு 50 வருடங்களுக்கு முன்னர் கலந்துரையாடப்பட்டு தீர்க்கப்பட்ட பிரச்சினையாகும். எனவே, அது தொடர்பில் மீண்டும் கலந்துரையாடல் அவசியம் இல்லை.” – என்றார்.
