ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் எண்ணக்கருவிற்கு அமைய ஒரு கிராம சேவகர் பிரிவிற்கு ஒரு வீடு என்ற செயற்றிட்டம் கிராம பகுதிகளுக்குச் சேர்ந்த போதிலும் என்னுடைய வேண்டுகோளுக்கிணங்க கண்டியில் தோட்ட பகுதிகளுக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும் பிரஜாசக்தியின் செயற்திட்டத்தின் பணிப்பாளர் நாயகமுமான பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
தெல்தெனிய ரங்கலை பெரி தோட்டத்தைச் சேர்ந்த மிகவும் பின்தங்கிய குடும்பங்களுக்கு ஒரு கிராம சேவகர் பிரிவிற்கு ஒரு வீடு என்ற செயற்றிட்டத்தை வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும் பிரஜா சக்தியின் பணிப்பாளர் நாயமுமான பாரத் அருள்சாமி, தெல்தெனிய பிரதேச செயலாளர், கிராம சேவகர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், இ.தொ.கா.வின் மாவட்ட தலைவர் மற்றும் பிரதேசவாசிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வில் உரையாற்றிய பாரத் அருள்சாமி,
” இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஊடாக கண்டி மாவட்டத்திற்கு ஆரம்ப கட்டமாக 1,100 இந்திய வீடமைப்பு திட்டமும் தோட்ட உட்கட்மைப்பு அமைச்சின் ஊடாக 100 வீடுகளும் 32 மில்லியன் பெறுமதியான அபிவிருத்தி திட்டங்களும் என்னுடைய கோரிக்கைக்கு அமைய வழங்கப்பட்டுள்ளது.
பிரஜா சக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமாக பதவி ஏற்றதன் பின்னர் தகவல் தொழில்நுட்பம், சுய தொழில், பண்ணை வளர்ப்பு போன்ற அபிவிருத்தி திட்டங்கள் தோட்ட பகுதிகளுக்கு கொண்டுச் சேர்க்கும முதல் கட்ட பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சுய தொழில் வேலைவாய்ப்பு சம்பந்தமாக அரசாங்கம் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுக்கும் நிலையில் கண்டி மாவட்டத்திற்கு அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, அரசாங்கம் கொண்டுவந்துள்ள பத்திக் சாரி உற்பத்தி, கூட்டு பண்ணை மரபு போன்றவற்றை நாங்கள் மலையகம் தோறும் கொண்டுச் செல்வுள்ளோம் என்று தெரிவித்தார்.
மேலும், பன்வில, ரங்கலை, கெலாபொக்க, உலுகங்கை, மீமுறே போன்ற பிரதேசங்களை இணைத்து ஒரு சுற்றுலா வலையத்தை உருவாக்குவதன் ஊடாக பெருந்தோட்ட பகுதிகளிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுக்க முடியும். உள்நாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் செயற்பாடுகளையும் இதனூடாக முன்னெடுக்க முடியும்.
அதேபோன்று, தோட்டபுறங்களில் காணப்படும் பாடசாலைகளின் அபிவிருத்திக்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஊடாக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
க.கிசாந்தன்










