கந்தபளை காணி ஊழல்! நடந்தது என்ன?

நுவரெலியா மாவட்டம், கந்தப்பளை நகரில் பல கோடி ரூபா பணப் பரிமாற்றத்துடன் இடம்பெற்ற காணி ஊழல் பற்றி கடந்த வாரம் ஆதாரங்களுடன் தகவல் வெளியிட்டிருந்தோம்.

அந்த ஊழல் குறித்து மேலும் பல தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன.

நுவரெலியா பிரதேச சபைத் தலைவரான வேலு யோகராஜ், கந்தப்பளை நகரில் (கொங்கோடியா தோட்ட மேற்பிரிவு) கோயிலுக்கு அருகில் சந்தைத் தொகுதி அமைப்பதற்கென பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு பிரதேச சபை ஊடாக 90 பேர்ச்சர்ஸ் காணியை பெற்றுக்கொண்டுள்ளார்.

அந்தக் காணியில் தேயிலையை அகற்றும் செலவீனமாக 32 இலட்சத்து 36 ஆயிரத்து 554 ரூபா 73 சதம் பணத்தை செலுத்துவதற்கு உடபுசல்லாவ பெருந்தோட்ட நிறுவனத்துடன் ஒப்புதலை பிரதேச சபைத் தலைவர் பெற்றுக்கொண்டுள்ளார்.

அதற்கான பணம் கொங்கோடியா தோட்ட நிர்வாகத்துக்கு நுவரெலியா பிரதேச சபையால் 2019.12.31ஆம் திகதி 1224 என்ற ரசீது இலக்கத்தின் மூலம் செலுத்தப்பட்டுள்ளது.

ஆயினும், அதே தொகை வேறொரு தனியார் நபரினாலும் செலுத்தப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

கொங்கோடியா தோட்ட நிர்வாகத்துக்கு குறிப்பிட்ட 32,36,554.73 என்ற தொகையை 2020.01.03 அன்று கந்தப்பளை, காமினிபுர பகுதியைச் சேர்ந்த ஐ. சஞ்சித் என்பவர் 1226 என்ற ரசீது இலக்கத்தின் ஊடாக செலுத்தியுள்ளார்.

ஒரே காணிக்கு, பிரதேச சபைத் தலைவரும் தனி நபரும் பணம் செலுத்தியுள்ளனர். எனினும், தனி நபரின் கணக்கிலிருந்தே குறித்த பணத்துக்கு வங்கிக்கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையிலேயே அந்தக் காணி பெருந்தொகை பணத்துக்கு தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, 2021.05.03ஆம் திகதி நுவரெலியா பிரதேச சபைத் தலைவர் வேலு யோகராஜால் கொங்கோடியா மேற்பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தலைவர் உள்ளிட்ட நிர்வாக சபைக்கு கடிதம் ஒன்று உத்தியோகபூர்வமாக அனுப்பப்பட்டுள்ளது.

‘கொங்கோடியா மேற்பிரிவில், குறித்த காணியில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அவ் வேலைகள் முடிவடைந்த பின்னர் கொங்கோடியா மேற்பிரிவு கோயிலுக்கு கடையறை ஒன்றை வழங்குவதாக உறுதியளித்துள்ளேன். அதற்கமைய அவ்வேலைகள் முடிவடைந்த பின்னர் கடையை வழங்குவதாக இத்தால் தயவுடன் அறியத்தருகிறேன்” – இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனியாருக்கு விற்பனைசெய்யப்பட்ட கட்டடத் தொகுதியில் ஆலயத்துக்கு கடையறை வழங்குவதாக பிரதேச சபையினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆக, சகல தரப்பினரையும் சமாளிக்கும் வகையில் சூட்சுமமான முறையில் இந்த ஊழல் இடம்பெற்றுள்ளமை அம்பலமாகிறது.

காணி அமைச்சு, உடபுசல்லாவ பெருந்தோட்ட நிறுவனம், மாகாண ஆளுநர் அலுவலகம் ஆகியவற்றிலிருந்து கந்தப்பளை 534ஆவது கிராம சேவகர் பிரிவில் 90 பேர்ச்சர்ஸ் காணியைப் பெற்றுக்கொள்வதற்கு நுவரெலியா பிரதேச சபைத் தலைவர் கடும் பிரயத்தனம் மேற்கொண்டுள்ளார். இந்த முயற்சிகள் அனைத்தும் தனியாருக்கு காணியை விற்பனை செய்வதற்காகவா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

பிரதேச சபையின் கடிதத் தலைப்பில் அனைத்து கடிதப் பரிமாற்றங்களும் இடம்பெற்றுள்ளன. காணிக்கான அனைத்து உத்தியோகபூர்வ கோரிக்கைகளும் நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் வேலு யோகராஜ் மேற்கொண்டுள்ளார்.

அங்கே கட்டட நிர்மாணப் பணிகள் இடம்பெறும்போது அது சட்டத்துக்கு முரணானது எனவும் உடனடியாக நிறுத்துமாறும் மாகாண உதவி ஆணையாளர் வை.பீ. விஜேவர்தனவால் பிரதேச சபைத் தலைவருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. எனினும், அதனையும் மீறி நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆக, அரச நிறுவனம் ஒன்றினால் பெறப்பட்ட காணி தனியாருக்கு விற்கப்பட்டுள்ளமை உறுதியாகிறது. தனியாருக்கு காணி பரிமாறப்பட்டதில் பெருந்தொகை பணம் கைமாறப்பட்டுள்ளது.

எமக்குக் கிடைத்த தகவல்களின் பிரகாரம் அந்த நிலம் காணி அமைச்சுக்கு சொந்தமானதாகும். அதில் இப்படியொரு ஊழல் இடம்பெற்றிருப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விடயம் குறித்து ஆராய்ந்து உரிய சட்ட நடவடிக்கையை மாகாண ஆளுநர் அலுவலகம் முன்னெடுக்க வேண்டும்.

<<இ.தொ.கா. மௌனம் சாதிப்பது ஏன்?>>

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினரான வேலு யோகராஜ் மீது அக்கட்சி இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அவரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாக எமது கட்டுரை வெளியாகிய மறுநாள் (06) அக்கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான் ~தமிழன்| நாளிதழுக்கு தெரிவித்திருந்தார்.

கந்தப்பளையில் இடம்பெற்றுள்ள மிகப்பெரிய பண மோசடியுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பெரும்புள்ளிகள் தொடர்புபட்டிருப்பதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

இங்கே, தனிப்பட்ட நபர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு இந்த விடயம் வெளிப்படுத்தப்படவில்லை. அரசாங்க நிலத்தில் பலகோடி ரூபாவுக்கு ஊழல் இடம்பெற்றிருப்பதற்கான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கிய புள்ளிகள் இந்த விடயத்துடன் தொடர்புபட்டிருப்பதாலும் பல இலட்சங்கள் பரிமாறப்பட்டுள்ளதாலும் அக்கட்சியின் உயர்பீடம் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறதா? அதன் உயர்பீடம் கூடி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காதது ஏன்?

இந்த நாட்டில் நேர்மையான அரசியல்வாதிகளையே மக்கள் விரும்புகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக அவ்வாறானவர்களை காண்பது மிக அரிதாக இருக்கிறது. கந்தப்பளை காணி விடயத்தில் மிக நேர்த்தியாக திட்டமிடப்பட்டு மிகப் பெரிய ஊழல் இடம்பெற்றிருக்கிறது. இதனுடன் தொடர்புடைய அனைத்து நபர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுதல் அவசியமாகும்.

அவ்வாறே, ஊழல்வாதிகளையும் அவர்களை வழிநடத்தியோரையும் துணைபோனோரையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காப்பாற்றப்போகிறதா என்ற சந்தேகக் கண்ணுடன் அக்கட்சியின் செயற்பாடுகளை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இங்கே நியாயம் தவிர்க்கப்படும் பட்சத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ_க்கு இருக்கும் நற்பெயருக்கு இழுக்கு ஏற்படுவதை யாராலும் தடுக்கவும் முடியாது. மலையகத்தின் மிகப் பழைமையான, எத்தனையோ தலைவர்கள், தொண்டர்கள், தொழிலாளர்களால் அர்ப்பணிப்புடன் வளர்க்கப்பட்ட கட்சி, அற்பர்களுக்காக விலைபோகாது என நம்புகிறோம்.

– நிர்ஷன் இராமானுஜம் –

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles