கனடா, இந்திய உறவு மீள மேம்படுமா?

கனடா பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள மார்க் கார்னேவுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இந்தியா – கனடா இடையே பாதிப்படைத்திருந்த உறவு மீண்டும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனடாவில் காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு, அங்குள்ள இந்திய தூதர் மீது கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.

இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த காலிஸ்தான் தீவிரவாதிகள் மீது, கனடா அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து இருநாட்டு தூதரங்களிலும், ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

இந்நிலையில் கனடா பிரதமராக இருந்து ட்ரூடா உட்கட்சி பூசல் காரணமாக கடந்த மாதம் பதவி விலகினார். இது லிபரல் கட்சிக்கு மார்க் கார்னே தலைமை ஏற்க வழிவகுத்தது.

பொது தேர்தலில் லிபரல் கட்சி மீண்டும் வெற்றி பெற்று, பிரதமரானால், இந்தியா – கனடா இடையேயான உறவை மேம்படுத்துவேன் என மார்க் கார்னே ஏற்கெனவே கூறியிருந்தார். அதேபோல் பொது தேர்தலில் லிபரல் கட்சி தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது. மார்க் கார்னே புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

இந்நிலையில் மார்க் கார்னேவுக்கு பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தியில்,

‘ கனடாவின் பிரதமராக மார்க் கார்னே) தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும், லிபரல் கட்சி வெற்றி பெற்றதற்கும் வாழ்த்துகள். இந்தியாவும் கனடாவும் ஜனநாயக மாண்புகள், சட்டத்தின் ஆட்சிக்கான உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் மக்கள் இடையேயான உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளன.” என்று கூறப்பட்டுள்ளது.

நமது கூட்டாண்மையை வலுப்படுத்தவும், நமது மக்களுக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தவும் தங்களுடன் பணியாற்றுவதை நான் எதிர்நோக்கியுள்ளேன் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள மார்க் கார்னேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருப்பதன் மூலம் இரு நாட்ட உறவுகள் மீண்டும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Latest Articles