மர்மமான முறையில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட யுவதி, கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் யுவதியின் உடமைகள் கண்டெடுக்கப்பட்ட பிரதேசம் பொலிஸ் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு சடலத்தினை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேற்படி யுவதி காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.
வெளிகல்ல எல்பிட்டியைச் சேர்ந்த பாத்திமா முனவ்வரா என்ற 22 வயது யுவதியே கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து காணாமல் போயிருந்தார்.
கெலி ஓயா நகரில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றில் கடமையாற்றிவந்ததாகக் கூறப்படும் மேற்படி யுவதி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை தனது தாயிடம் பஸ்ஸுக்கு நூறுரூபாய் பணத்தை பெற்றுகொண்டு தொழில் புரியும் இடத்திற்கு வீட்டிலிருந்து சென்றுள்ளார்.
வீட்டிலிருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள பள்ளி வாசலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராவில் பாத்திமா முனவ்வரா செல்வது பதிவாகியுள்ளது. எனினும் அதற்கு அப்பால் உள்ள கெமராக்களில் பாதிவாகியிருக்கவில்லை. எனவே வீட்டிலிருந்து 100 மீற்றர் இடைவெளியிலேயே யுவதி காணாமல் போயிருக்க கூடும் என்ற கோணத்தில் தேடப்பட்டுவந்த நிலையில்,
குறித்த யுவதியின் வீட்டிலிருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில் பிரதான வீதியிலிருந்து 50 மீற்றர் உட்புறமாக காட்டுப்பகுதியிலிருந்து இன்று (12) மாலை யுவதியின் தண்ணீர் போத்தலும் ஒரு காலணியும் மீட்கப்பட்டுள்ளதோடு குறித்த பிரதேசம் பொலிஸ் பாதுகாப்பு வலயமாக மாற்றப்பட்டு நீதவான் முன்னிலையில் சந்தேகத்திற்கிடமான குழி காணப்படும் இடத்தினை தோண்டி பார்ப்பதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
அதேவேளை, குறித்த யுவதியைத் தான் கொலை செய்தார் என்று சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
