” நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எதிர்க்கட்சி எமக்கு தெளிவுபடுத்தவில்லை, சிலவேளை, அது நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்தால் அடுத்தக்கட்டம் என்னவென்பது குறித்தும் விவரிக்கப்படவில்லை. எனவேதான், நடுநிலை வகிக்கும் முடிவு எடுக்கப்பட்டது. எனினும், எதிர்த்தரப்பினர் தமது திட்டங்களை அறிவித்தால் எமது முடிவையும் அறிவிப்போம்.”
இவ்வாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்.பி. தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கொண்டுவரப்படுகின்ற நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து எமக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் கிடையாது. ஆனாலும், அவர்கள் கொண்டுவரும் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எவ்வித தெளிவுபடுத்தல்களும் எமக்கு வழங்கப்படவில்லை. அடுத்தகட்ட நகர்வு குறித்தும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
நாடாளுமன்றத்தில் 113 என்ற பெரும்பான்மையை நிரூபிக்கும் பட்சத்திலேயே அடுத்தகட்ட நகர்வுக்குச் செல்லமுடியும். இருப்பினும் அடுத்தகட்ட நகர்வு தொடர்பில் எதிர்க்கட்சியினரால் எதுவும் தெளிவுபடுத்தப்படவில்லை.
எதிர்த்தரப்பினரின் திட்டங்கள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முடிவெடுக்கும்” – என்றார்.