போருக்கு பின்னர் வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற இடம்பெற்ற 10 காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன எனவும், அவை இன்னும் நிறைவுபெறவில்லை என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நாடாளுமன்றம் நேற்று முற்பகல் சபாநாயகர் தலைமையில் கூடியது.
வாய்மூல விடைக்கான கேள்வி – பதில் நேரத்தில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக,
” வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் உள்நாட்டு மோதல் நிலை முடிவடைந்த பின்னர் இடம்பெற்ற – எனினும், இற்றைவரையில் தீர்க்கப்படாத ஏதேனுமொரு காணாமலாக்கப்பட்ட சம்பவம் பற்றிய விசாரணைகள் இன்றளவில் நிறைவடைந்துள்ளதா ” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆனந்த விஜேபால,
‘ வடக்கு, கிழக்கில் யுத்தத்துக்கு பிறகு இடம்பெற்ற நான்கு காணாமல்போன சம்பவங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களமும், 6 காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் கொழும்பு குற்றவியல் பிரிவும் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றன. இவை தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவுபெறவில்லை.” – என்று குறிப்பிட்டார்.
மேற்படி காணாமலாக்கப்பட்ட சபவங்கள் பற்றிய விசாரணைகள் தாமதமாக்கப்பட்டமைக்கு அரசியல் தலலயீடுகள் காரணமாக அமைந்தனவா என்ற கேள்விக்கு, இல்லை என்று அமைச்சர் பதிலளித்தார்.
அதேவேளை, அரசியல் செயற்பாட்டாளர்களான லலித், குகன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் மீள முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் தொடர்பிலும் விளக்கம் கோரப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.