வடக்கின் விடயங்களை அரசியல் பிரச்சினைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது. அப்பிரதேசத்திற்கு அபிவிருத்தியும் அவசியம். இல்லையெனில் ஏனைய மாகாணங்கள் முன்னேறுகையில் வடக்கு பின்தங்கிவிடும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். வடக்கின் அபிவிருத்தியை போன்றே அரசியல் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மாகாண சபைகளை வலுப்படுத்தி அதிகாரங்களை வழங்குவது தொடர்பாக தனது கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கியுள்ளதாகவும், மத்திய அரசாங்கத்திற்கு உதவும் வகையில் 9 மாகாண சிற்றரசுகளின் கீழ் அபிவிருத்தி வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். தேசிய காணி ஆணைக்குழு மற்றும் உண்மை நல்லிணக்க ஆணைக்குழு (TRC) ஸ்தாபிக்கப்படும் எனவம் நவாஸ் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைவாக எதிர்வரும் 5 வருடங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் இன்று (14) முற்பகல் இடம்பெற்ற “ரணிலால் இயலும்” வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
முன்னாள் விவசாய அமைச்சர் அனுரகுமார எவ்வாறு தென்னிலங்கையில் மாகாண சபைகளுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தார் என்பதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இன்று யாழ்ப்பாணம் வந்து மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிய போதிலும் இந்த விடயங்கள் தொடர்பில் மக்களுக்கு உறுதிமொழி அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
கடந்த பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து நாட்டிலுள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் என அனைத்து மக்களும் நம்பிக்கை இழந்திருந்த நிலையில் அவர்களுக்கு நம்பிக்கையை வழங்குவதற்காக தாம் பாடுபட்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். “இயலும் ஸ்ரீலங்கா” திட்டத்தின் மூலம் நாட்டின் எதிர்காலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தற்பொழுது நாட்டின் பொருளாதார வாயில்கள் திறந்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை வலுவாக தொடராவிட்டால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையக்கூடும் என சர்வதேச நாணய நிதியம் நேற்று விடுத்த எச்சரிக்கையை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டத்தைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும் எனவும் தெரிவித்தார்.
இன்னும் 3 வருடங்களுக்கு இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் எவராலும் உடைக்க முடியாது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வடக்கை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டமொன்று வடக்கிற்கு அவசியம் எனவும் சஜித் பிரேமதாசவிடமோ அனுரகுமாரவிடமோ அதற்கான தீர்வு இல்லை எனவும் குறிப்பிட்டார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க:
எப்பொழுதும் நான் யாழ்ப்பாணம் வருகிறேன். தேர்தல்களின் போதும் வந்து மக்கள் மத்தியில் உரையாற்றியுள்ளேன்.ஏனைய வேட்பாளர்களுக்கு தேர்தல் காலத்தில் மாத்திரம் தான் யாழ்ப்பாணம் நினைவு வருகிறது. ஆனால் எனக்கு தேர்தல் காலத்திலும் வந்து உங்களை சந்திக்க முடிகிறது. 1978 முதல் இங்கு வந்துள்ளேன். அந்த சமயம் யாழ் மாநகநகர சபை, யாழ் பிரதேச சபை, சாவகச்சேரி நகர சபை, பருத்தித் துறை நகர சபைக்கும் போட்டியிட்டது. சாவகச்சேரி பகுதி எனக்கு வழங்கப்பட்டிருந்தது. அன்று தொடக்கம் இங்கு வருகிறேன். இன்று எனக்கு வாக்குக் கோரி வந்துள்ளேன்.
நீங்கள் உணவின்றி இருந்த போது அதற்கு தீர்வு வழங்கினேன். கேஸ்,பெற்றோல்,உரம். மருந்து இல்லாதபோது நான் அவற்றைப் பெற்றுக் கொடுத்தேன்.
எந்த எதிர்பார்ப்பும் இன்றி இருந்த உங்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளேன். எதிர்காலத்தையும் உருவாக்கினேன். தற்பொழுது பொருளாதாரத்தை மீட்டிருக்கிறேன். மக்களுக்கு வாழும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அது 2019 போன்ற நிலைமையல்ல. அந்த நிலைமைக்கு நாம் செல்ல வேண்டும். இன்றுள்ள நிலைமை மாறலாம்.வீழ்ச்சியடையலாம். அது குறித்து ஐஎம்எப் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய நிலைமை நன்றாக உள்ளது. ஆனால் இந்தப் பாதையில் செல்லாவிட்டால் மீண்டும் சரிவு ஏற்படலாம் என எச்சரித்துள்ளது. இதே பாதையில் தொடர்ந்து செல்வதற்காகவே உங்களிடம் வாக்கு கோரி வந்துள்ளேன்.
அநுரவுக்கும் சஜித்திற்கும் இன்றுள்ள முறைமையை மாற்றி தமது முறைப்படி செல்ல வேண்டும். வாழ்க்கைச் சுமையை குறைப்பதாகவும் வரியை குறைப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். அவ்வாறு செய்தால் ஐஎம்.எப் உதவி கிடைக்காது. அந்த நிலையில் வீழ்ச்சி ஏற்படும். நான் ஐஎம்எப் உடன் கலந்துரையாடி ரூபாயை பலப்படுத்தினேன். 370 ரூபாயாக இருந்த டொலரின் பெறுமதி இன்று 300 ரூபாயாக குறைந்துள்ளது. பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன. இன்னும் விலைகள் குறைய வேண்டும். மக்களுக்கு இன்னும் நிவாரணம் வழங்க வேண்டும். எமக்கு கடன் வழங்க வேண்டாம் எனவும் பணம் அச்சிடக் கூடாது எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில் நிதி திரட்டவே வரி அதிகரிக்கப்பட்டது. வரி அதிகரித்ததால்தான் வருமானம் அதிகரித்து ரூபாயின் பெறுமதி உயர்ந்தது. அதனால் ஓரளவு நிவாரணம் வழங்க முடிந்தது.
வாழ்க்கைச் செலவை குறைப்பதுதான் எனது பிரதான நோக்கமாகும். மொத்தத் தேசிய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அஸ்வெசுமவை அறிமுகம் செய்து நிவாரணம் வழங்கினோம். உர மானியம் அளித்தோம்.அரச மற்றும் தனியார் துறை சம்பளத்தை அதிகரித்துள்ளோம். உழைக்கும்போது அறவிடும் வரியை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். 5 இலட்சம் மட்டத்தில் இருந்து வரி செலுத்தும் மட்டத்தை 7.5 இலட்சமாக அதிகரித்துள்ளோம். அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது. அதனால் வாகன இறக்குமதிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் 3,4 வருடங்களின் பின்னர் வீழ்ச்சி ஏற்படாது.
அநுரவும் சஜித்தும் வரியை குறைப்பதாக கூறுகின்றனர். நானும் வரியை குறைக்க விரும்புகிறேன். தற்போதைய நிலையில் அவ்வாறு செய்தால் இப்போதைய முன்னேற்றம் பாதிக்கப்படும். 2022 மே – ஜுன் மாதம் போன்ற நிலை ஏற்படும். அதனாலே மக்கள் முன்பாக வந்து உண்மை நிலையைக் கூறுகிறேன்.
ஐஎம்எப் இடம் சென்று பேசப் போவதாக இரு வேட்பாளர்களும் கூறுகின்றனர். அதனை அவர்களுக்கு முன்னரே செய்திருக்கலாம். பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு முதலில் வாழ்க்கைச் சுமையைக் குறைக்க வேண்டும். பொருளாதார நெருக்கடிக்கான மூல காரணியை ஆராய வேண்டும். அதற்குத் தீர்வு காண வேண்டும்.
ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்து ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் போன்ற நிலைக்கு முன்னேற வேண்டும்.
முதலீட்டாளர்கள் முதலீடுகளை ஆரம்பிக்கும்வரை இளைஞர் யுவதிகளுக்கு சில வாய்ப்புகளை வழங்க வேண்டும். அடுத்த வருடம் ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புகளை வழங்க இருக்கிறோம். விவசாய நவீன மயமாக்கலையும் மேற்கொள்ள இருக்கிறோம். உலக சனத்தொகை இரண்டு பில்லியன்களால் உயர இருக்கிறது. அதில் சிறு குழுவுக்காவது உணவு வழங்கும் நிலையை உருவாக்க வேண்டும். பழமையான விவசாய முறைகள் அன்றி நவீன விவசாய முறைகளின் ஊடாக உற்பத்தி அதிகரிக்கும், வருமானம் உயரும்.
அநுரவையும் சஜித்தையும் பார்த்தால் முதலீட்டாளர்கள் திரும்பிச் சென்று விடுவார்கள். முதலில் நாட்டை முன்னேற்றுவோம். அத்தோடு வடக்கில் உள்ள எஞ்சிய பிரதான பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டும்.வடக்கு விடயங்களை அரசியல் பிரச்சினைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தக் கூடாது. அபிவிருத்தியும் அவசியமானது. இன்றேல் ஏனைய மாகாணங்கள் முன்னோக்கிச் சென்று விடும். மாகாண சபைகளை பலப்படுத்தி வழங்க வேண்டிய அதிகாரங்களை வழங்குவதாக எனது விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளேன். மத்திய அரசுக்கு ஒத்துழைப்பதற்கு 9 மாகாண சிற்றரசுகள் தேவை.அந்தந்த பிரதேச அபிவிருத்திகளை அவை பெறுப்பேற்று மேற்கொள்ள வேண்டும்.தேசிய காணி ஆணைக்குழுவை ஸ்தாபிக்க வேண்டும். பல விடயங்களை மேற்கொள்ள உடன்பட்டுளோம். உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்க இருக்கிறோம். நவாஸ் குழுவின் பரிந்துரைக்கு அமைவாக காணமல் போனோர் தொடர்பான பிரச்சினையை 5 வருடங்களில் நிறைவு செய்ய இருக்கிறோம்.
தமிழர் பிரச்சினையை தீர்ப்பதோடு தமிழ் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் தீர்க்க இருக்கிறோம். பெண்களை வலுவூட்டும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளோம்.குடும்ப வன்முறைகளை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். குடிபோதையில் வந்து மனைவியை அச்சுறுத்தினால் அந்தக் கணவரை பொலிஸில் நிறுத்தமுடியும். அரசியல் பிரச்சினைக்கு மாத்திரம் அன்றி அபிவிருத்தியும் மேற்கொள்ள இருக்கிறோம். காங்கேசன்துறையில் முதலாவது முதலீட்டு வலயம் உருவாக்கப்படும். இரண்டாம் கட்டம் பரந்தனிலும் மூன்றாம் கட்டம் மாங்குளத்திலும் ஆரம்பிக்கப்படும். பாரிய அபிவிருத்தியை ஏற்படுத்த இருக்கிறோம். சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கான ஹோட்டல் வசதிகள் இங்கு போதாது. அவற்றை ஆரம்பிக்க வேண்டும்.படகுச்சவாரிகளை ஆரம்பிக்க வேண்டும். புலிகள் காலத்தில் படகோட்டியவர்கள் இருக்கிறார்கள்.அவர்களுக்கு வருமான வழியாக இருக்கும்.
இங்கு டிஜிட்டல் வலயமொன்றையும் உருவாக்க இருக்கிறோம். யுத்தத்துடன் தொடர்புடையவர்களை இணைத்துக் கொண்டு நவீன விவசாயத்தை முன்னெடுக்க இருக்கிறோம்.அவர்களுக்கும் எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். எமது கடற்றொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும்.
பூகரில் சூரிய சக்தி மின்உற்பத்தி நிலையம் ஆரம்பிக்க இருக்கிறோம். அரசியல் பிரச்சினைக்கு தீர்வும் அபிவிருத்தியும் சமமாக முன்னெடுக்கப்பட வேண்டும். அநுர குமார முன்னர் மாகாண சபை முறைக்கு எதிராக போரடினார். தெற்கில் பாரிய யுத்தம் செய்தனர். அதற்கு எதிரானவர்களிடம் உறுதி மொழி பெற்றனர். தமிழ் மக்களை அச்சுறுத்தியதற்கு எதிராக நாம் யாழ்ப்பாணத்தில் அநுரவை விமர்சித்திருந்தேன். அதற்கு அவர் எனக்கு ஏசியுள்ளார். நான் ஏதாவது தவறாகச் சொன்னேனா? சுமந்திரன் தான் அவரை பாதுகாக்கிறார்.
நான் பொருளாதார பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பினால் அவரால் பதில் வழங்க முடியாது.அவர் என்னை விவாதத்திற்கு அழைத்தார். ஆனால் இதுவரை அதற்கான அழைப்பு கிடைக்கவில்லை. நான் கேட்கும் கேள்விகளுக்கு அவரால் பதில் வழங்க முடியாது. சஜித்தைப் பற்றி சொல்வதற்கு எதுவுமில்லை.அவரை பற்றி எனக்கு நன்கு தெரியும். இந்த இரு வேட்பாளர்களினாலும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வராது.
எமது திட்டங்களினால்தான் யாழ்ப்பாணத்தை முன்னேற்ற முடியும். இங்கு பாரிய மாகாண சபைக் கட்டடமொன்று உள்ளது. இந்தக் கட்டடம் போதுமானதல்ல. அதனை பலப்படுத்த நாம் நிதி ஒதுக்குவோம். யாழ்ப்பாணத்திற்கு பலம் வாய்ந்த பொருளாதரம் அவசியம்.
கேஸ் சிலிண்டருக்கு வாக்களியுங்கள். தவறினாலும் கேசும் இல்லை. யாழ்ப்பாணத்திற்கு அபிவிருத்தியும் இல்லை” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.