“மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு சென்றது தனியே அவர்களின் தொழிற்சங்க உறுப்பினர்களின் வாக்குகளினால் மட்டுமல்ல என்பது அவர்களுக்கு தெரியாமல் இருப்பது கவலைக்குரியதே. மலையக தமிழ் பிரதிநிதிகள் நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என தொழிற்சங்கங்களுக்கு வெளியே இருக்கும் சமூக அமைப்புக்கள், அரசு சார்பற்ற நிறுவனங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தெளிவூட்டி செயல்பட்டதை மறந்து தற்போது விமர்சிப்பது என்பது ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பதற்கு சமமாகும்.”
இவ்வாறு மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட் தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
” மலையக மக்களுக்கு காணி உரிமை வேண்டும் எனும் அமைப்பு ரீதியிலான கோரிக்கை உங்கள் அரசியல் செயற்பாட்டுக்கு பலம். அதைப் பற்றிப் பிடித்துக் கொள்வதே சால சிறந்தது.
முதலாவதாக மலையக காணியற்ற மக்களுக்கு இன்னும் காணி உரிமை கிடைக்கவில்லை. தோட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு மட்டுமே ஏழு பேச்சு கொடுக்கப்படுகின்றது. 7 பேர்ச் காணி என்பது சிறு நகராக்க திட்டங்களில் ஒன்று. அதனால் தொழிலாளர்கள் அவ்வீட்டில் இருக்க முடியுமே தவிர; படித்த வாலிபர்கள் வேலை தேடி மலையகத்துக்கு வெளியே சென்று விட வேண்டும் எனும் இனவாத நோக்கம் கொண்ட திட்டமாகவே அது மலையத்தில் முன்னெடுக்கப்படுகின்றது.அதுவும் வீரியமின்றி என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக அத்திட்டத்தினால் மலையக மக்கள் தாம் உருவாக்கிய மலையகம் எனும் தேசத்திற்கும், அவர்களின் வியர்வையும், ரத்தமும் சிந்தி உரமாகிய மண்ணிற்கும் உறவோ, உரிமையோ அவர்கள் கொள்ளக்கூடாது. உழைத்து விட்டு வீட்டுக்குள் முடங்கிவிட வேண்டும் என சிந்திக்கும் இனவாத அரசின் நோக்கமும் அதற்குள் உள்ளது என்பதை நாம் அறிவோம்.
எனவே மலையக மக்களுக்கு ஏழு பேர் காணி நாங்கள் தான் பெற்று கொடுக்கின்றோம். எங்களால் மட்டுமே காணி உரிமை பெற்றுக் கொடுக்க முடியும் என்று கூறுவது ஒட்டுமொத்த மலையக மக்களையும் அறிவிலிகள் என சிந்திப்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இதுவா உங்கள் அரசியல்.
மலையக மக்களுக்கு காணி உரிமை என்பது பெருந்தோட்ட தொழிலாளர்களோடு காணியற்ற மலையக மக்களுக்கும் கிடைப்பதற்கு வழி செய்ய வேண்டும். கொடுக்கப்படும் காணியில் தமது சுய பொருளாதரத்தை வளர்த்துக் கொள்வதற்கு ஏற்ற வண்ணமாக போதுமான அளவு காணியும் கிடைக்க வேண்டும்.இவ்வாறே பல தசாப்தங்களாக பெரும்பான்மை இனத்தவர்களுக்கு நாட்டின் பல பாகங்களிலும் காணிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்நோக்கத்தோடு மலைகத்தின் மத்திய பகுதியில் காணி அபகரிக்கும் நோக்கத்தோடு 1977 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னர் அன்றைய ஆட்சியாளர்கள் முயற்சித்தப்போதுபோது அதற்கு எதிராக நடந்த போராட்டத்தில் டெவன் சிவனு லெட்சுமணன் போலீஸ் துப்பாக்கி சூட்டில் உயிர் பலியானார்.அவர் உயிர்ப்பலி ஆனது மலையக தேசம் மலையக மக்களுக்கு சொந்தமே என் செய்தியோடு.
தற்போது காணி உரிமை தொடர்பான மலையகஅமைப்புகள் ஒன்று சேர்ந்து இருப்பது நீங்கள் அங்கம் வகிக்கும் நாடாளுமன்றத்தில் 2013 ஆம் ஆண்டு; அன்று ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மலையகத்தில் வெற்றறு காணியாக இருக்கும் 32,000 ஹெக்டர் யார் காணிகள் மலையக மக்களுக்கு பகிர்ந்தளிகப்படும் என் கூற்றினை மையப்படுத்தியும்; அதற்குப் பின்னர் வந்த அரசுகள் மலையக மக்களுக்கு காணி கொடுக்கப்படும் எனும் உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துமாறு கோரியமாகும். இதனை அமைப்பு ரீதியாக முன்னெடுத்தால் மட்டுமே அது மக்கள் குரலாக வெற்றியை நோக்கி தள்ளுவதற்கு ஏதுவாக அமையும்.
மலையக மக்கள் அரசியல்வாதிகளை மட்டுமே நம்பி இருக்க வேண்டும் என்பது அடிமை சிந்தனையாகும். மலையக மக்கள் அரசியல் சக்தியாக இருந்தால் மட்டுமே அவர்களுக்கு அரசியல் எதிர்காலம் உண்டு.அதேபோன்று 200 வருட வரலாற்று வாழ்வு அடுத்த நூற்றாண்டு நோக்கி செல்வதற்கும் அது உறுதுணையாக அமையும். அதற்கு சுய பொருளாதரத்தில் வளர்வதற்கு ஏற்ற வகையிலான காணியுரிமை முக்கிய பங்கு வகிக்கின்றது.அதன் மூலமே மலையக தேசிய அடையாளங்களை பாதுகாக்க முடியும். அதற்கான முன் மொழிவுகளோடேயே மலையக காணி அமைப்பு உருவாகின்றது. இதனோடு மலையக அரசியல் தலைமைத்துவங்களும் கைகோர்க்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றோம்.” – என்றுள்ளது.
