நுவரெலியா இபோச டிப்போ காவலாளியை கொலைசெய்து டிப்போவில் வைக்கப்பட்டிருந்த சுமார் ஒன்பது இலட்சம் ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
இன்று அதிகாலைவேளையிலேயே இக்கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நுவரெலியா கல்பாய பிரதேசத்தை சேர்ந்த கே. லோகேஸ்வரன் என்ற 85 வயதுடைய காவலாளியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
காவலாளியை கொன்றுவிட்டு டிப்போவில் இருந்த அலுமாரியில் இருந்து சுமார் ஒன்பது லட்சம் ரூபா பணத்தை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காவலாளி தனக்குரிய பாதுகாப்பு அறை பகுதியில் இருந்ததாகவும், அப்போது அவரின் தலைபகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கியே அவர் கொல்லப்பட்டுள்ளார்.
கொலைச் சம்பவத்தின் போது, டிப்போவுக்குப் பொறுப்பான உத்தியோகத்தரும், காசாளரும் டிப்போவில் தங்கியிருந்த போதிலும், அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா லங்கம டிப்போவில் வியாழக்கிழமை (05) பிற்பகல் ஓடிய பஸ்களின் வருமானம் வங்கியில் வைப்பிலிடுவதற்காக அலுமாரியில் வைக்கப்பட்டிருந்ததாக அந்த டிப்போவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான் பார்வையிட்டதன் பின்னர் விசாரணைகள் மேற்கொண்டு சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்










