குற்றவாளிகளுக்கு அரசியல் அடைக்கலம் வழங்காத  ஆட்சியை உருவாக்கியுள்ளோம்

போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு தாய்நாடு, தேசம் மற்றும் பிள்ளைகள் பலியாகாமல் தடுப்பது தனது ஒரே நோக்கம் என்றும், எந்தவொரு குற்றவாளிக்கும் அல்லது போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் எவருக்கும் அரசியல் அடைக்கலம் வழங்காத ஒரு அரசாங்கம் இன்று அமைக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட தென் மாகாண நிகழ்ச்சி இன்று (20) பிற்பகல் தங்காலை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

போதைப் பொருள் சுற்றிவளைப்புகளில் ஈடுபட்ட பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வும் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.

ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை:

போதைப் பொருள்,குற்றச்செயல்கள் என்பவற்றுடன் பிணைந்த கருப்புப் பொருளாதாரம் எமது நாட்டில் எந்த விதத்திலும் அபிவிருத்தி,அமைதி, சுபீட்சம் என்பவற்றை கொண்டுவராது. இந்தப் பேரழிவிலிருந்து எமது சமூகத்தைப் பாதுகாக்க வேண்டும். இந்தப் பேரழிவு கிராமங்கள்,நகரங்கள், குடும்பக் கட்டமைப்பை எந்தளவு ஆக்கிரமித்துள்ளது என்பதை நாம் அறிவோம். குடும்பத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் வளர்ந்த பிள்ளை இந்த போதைப் பொருளுக்கு அடிமையாகி மோசமான நபராக மாறியிருப்பார். எதிர்பார்ப்புடன் வளர்த்த பிள்ளை சமூகத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும் செயற்பாட்டாளராக மாறியிருப்பார். இதனை எந்தப் பெற்றோரினால் தாங்க முடியும்? தாம் பாலூட்டி வளர்த்த பிள்ளைக்கு இவ்வாறான நிலைமை ஏற்படுவதை எந்த தாயும் எதிர்பார்க்க மாட்டார்.ஆனால் இலட்சக்கணக்கான பிள்ளைகள் இந்த பேரழிவில் சிக்கியுள்ளனர். இது அந்த முழுக் குடும்பத்தையும் வீழ்ச்சியடையச் செய்துள்ளது. இந்த பேரழிவினால் கிராமங்கள் பீதியடைந்துள்ளன. இதனால் பிள்ளைகளை தொழிலுக்கு அனுப்ப,பகுதி நேர வகுப்பிற்கு அனுப்ப, விளையாடுவதற்கு அனுப்ப,சுற்றுலா அனுப்புவதற்குக் கூட பெற்றோர் பயப்படுகின்றனர். அதனால் தான் இந்தப் பேரழிவை தோற்கடிக்க வேண்டும்.

போதைப் பொருளுக்கு அடிமையாகும் பிள்ளை அடுத்து மோசடிகளில் ஈடுபட ஆரம்பிக்கிறார். திருடராக மோசடிகாரராக அவர் மாறுகிறார். போதைப் பொருள் வலையமைப்பிற்கு இறையாகி பணத்திற்காக கொலை செய்ய ஆரம்பிக்கிறார். கைதான 90 வீதத்திற்கும் அதிகமானவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களாக உள்ளனர். இது எமது நாட்டின் எதிர்காலத்தை முழுமையாக விழுங்கியுள்ளது. போதைப் பொருள் ஊடாக பெருமளவு பணப்பரிமாற்றம் இடம்பெறுகிறது. எந்த வர்த்கத்தின் ஊடாகவும் பல நூறு வருடங்களில் ஈட்ட முடியாத பணத்தை ஒரு படகின் ஊடாக ஈட்டுகின்றனர்.

இந்தப் பணம் பல்வேறு கருப்பு வர்த்தகங்களில் ஈடுபடுத்தப்படுகிறது. அந்தப் பணத்தினால் அரச பொறிமுறையில் உள்ள பலவீனமானவர்களை வாங்க முடிகிறது. சுற்றிவளைப்புகள் மற்றும் தங்களுக்கு எதிராக அச்சுறுத்தல்களை தடுக்க இவ்வாறு செய்கின்றனர். சில பொலிஸ் நிலையங்கள் இதற்கு எதிராக செயற்படுவதில்லை என சில கிராமங்களில் குற்றம் சாட்டப்படுகிறது. நாம் அனைத்து பொலிஸாரையும் அவ்வாறு கூறுவில்லை. சில சமயங்களில் பயமுறுத்தப்பட்டுள்ளனர். போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு சிறையில் சிறந்த வசதிகளை அளிக்காவிட்டால் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினர் அச்சுறுத்தப்படுகின்றனர்.

அரச பொறிமுறையை அச்சுறுத்தி தமது பணியை மேற்கொள்ளும் போக்கு ஏற்பட்டுள்ளது. அண்மையில் சில பொலிஸ் அதிகாரிகளுடனான தொலைபேசி உரையாடல்கள் வெளியாகியிருந்தன. அந்த உரையாடல்களின் பிரகாரம் பொலிஸார் தான் பாதாள தலைவர்கள் என எண்ணத் தோன்றும். பொலிஸ் அதிகாரி தான் அச்சுறுத்தப்படுகிறார். சீருடையின் கௌரவம் இதனால் பாதுகாக்கப்படுகிறதா? இளம் குழுக்களை இணைத்து சட்ட விரோத ஆயுதக் குழுக்கள் உருவாகி போதைப் பொருள் வலையமைப்புடன் கைகோர்த்துள்ளன. இது பொருளாதாரத்திற்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக இருப்பிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது வரை நீடித்த பழைய பாதையில் கண்டும் காணாமல் செல்வதா?அல்லது எமக்குள்ள பொறுப்பை நிறைவேற்ற நாம் போராடுவதா? இதில் எதனை தெரிவு செய்யப் போகிறோம்.
தாய்நாட்டின் மீதான பிணைப்பிற்கு அமைய நாம் இதனை தோற்கடிப்பதற்கான பாதையை தெரிவு செய்து அதனை அழிப்போம்.
இந்த பேரழிவை ஒழிப்பது எமது அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். அதற்கான ஆரம்ப முன்னெடுப்பாக இந்த வலையமைப்பை உடைக்க வேண்டும்.இவர்கள் அரசியல் தலைவர்களின் உதவியுடன் பாதுகாக்கப்பட்டனர். அவர்களுக்கு அதிகாரம் வழங்கினர்.அரசியல்வாதிக்குள்ள அதிகாரம் ஜுலம்பிடியே அமரே போன்றவர்களுக்கு வழங்கப்பட்டன.

சில கட்சிகளின் செயற்குழுக்களில் பாதாள உலகத்தினர் அங்கம் வகித்தனர். சில சமயங்களில் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில் இருந்தனர். சில காலங்களில் இளவரசர்களின் பாதுகாப்பிற்காக இருந்தனர்.எந்தவொரு குற்றவாளிக்கும் அரசியல் பாதுகாப்பு வழங்கப்படாத அரசாங்கம் இன்று உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் எமக்களித்துள்ள மக்கள் ஆணையில் அவர்களின் எதிர்பார்ப்பு பொதிந்துள்ளது. அந்த மக்களின் எதிர்பார்ப்பிற்கமைய ‘அகன்று செல்’ எனும் பாரிய முன்னெடுப்பை ஆரம்பித்துள்ளோம்.

சிலர் உண்மையான பிரச்சினைகளை ஓரங்கட்டி தாமாக உருவாக்கிய செயற்கையான பிரச்சினைகளை சமூகத்திற்குள் கொண்டுவர முயல்கின்றனர். சமூகத்தை திட்டமிட்ட முறையில் ஒரே திசையில் கொண்டு செல்ல முற்படுகையில் குழப்ப நிலையை உருவாக்க வேறு திசைகளுக்கு சமூகத்தின் கவனத்தை திருப்ப முயல்கின்றனர். நாம் அந்த பொய்யான குழிகளில் விழ மாட்டோம். சமூகத்தை மீட்கும் இந்த செயற்பாட்டை வெற்றி கொள்வோம்.

எமது படையினரும் பொலிஸாரும் பாரிய பங்களிப்பு செய்கின்றனர். உங்கள் சீருடையின் கெளரவம் குற்றவாளிகளின் முன்னிலையில் கரைந்து செல்ல இடமளிக்காதீர்கள். எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் உங்களை பாதுகாக்க நாம் முன்னிற்போம். பாரதூரமான பணியை செய்கிறீர்கள். துணிச்சலுடன் உங்கள் பணியை செய்யுங்கள். நடுக்கடலில் போதைப் பொருளுடனான படகு கைப்பற்றப்பட்டது. கடற்படை நாடுபூராவும் கடற்பரப்பை பாதுகாத்து பாரிய பங்காற்றுகிறது. புலனாய்வுப் பிரிவு அதற்கான தகவல்களை வழங்குகிறது. விமானப் படை,இராணுவம் என்பன அதற்கான பங்களிப்பை வழங்குகிறது.

இந்த பேரழிவை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அரசியல் ரீதியிலான உறுதி மற்றும் அதற்குத் தேவையான அரச பொறிமுறை என்பன இதில் முக்கியமாக முன்னெடுக்கப்படுகிறது என நம்புகிறோம்.

யாருக்காவது இதனை முன்னெடுக்க விருப்பமில்லாவிட்டால் கையை உயர்த்தி சொல்லுங்கள். உங்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனை செய்யுங்கள். போதைப் பொருட்களை விற்பவர்,அடிமையானவர், கிராமத்தில் திடீரென பணம் சேர்த்தவர் யார் என பொதுமக்களுக்குத் தெரியும். இவர்கள் மக்களுக்கு மறைவானர்கள் அல்ல. மக்கள் அதனை வெளியில் சொல்லப் பயப்படுகின்றனர். சில இடங்களில் மக்கள் இவர்களுக்குப் பயந்து கிராமங்களை விட்டுச் சென்றுள்ளனர்.

பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக்கள் உருவாக்கப்படுகின்றன. குற்ற வலையமைப்பிற்கு எதிராக மக்கள் எழுச்சி பெற வேண்டும். இந்த பேரழிவை தோற்கடிக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும். போதையற்ற கிராமம், போதையற்ற நகரம், போதையற்ற நாட்டை உருவாக்குவோம். அதற்கு பொதுமக்களின் தலையீடு அவசியம். அடிமையானவர்களை மீட்க வேண்டும்.மதத்தலைவர்களுக்கு இதில் முக்கிய பங்கு உள்ளது. மத ஸ்தலங்களுக்கும் கிராமத்திற்கும் இடையிலான பிணைப்பை இதற்காக பயன்படுத்த வேண்டும்.

பல தொண்டர் அமைப்புகள் புனர்வாழ்வு செயற்பாடுகளுக்கு தலையிட்டு வருகின்றனர். இதற்காக வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.சமூக விரோத நபராக போதைக்கு அடிமையானவராக யாரும் பிறப்பதில்லை. எமது பிள்ளைகளை இவ்வாறான பேரழிவுகளுக்கு அடிமையாகாத நாட்டை உருவாக்க நாம் தவறியுள்ளோம். அந்த இளைஞர்களை ஏசுவதில் பயனில்லை.

அத்தோடு பலமான புனர்வாழ்வு செயற்பாடு அவசியம் .சகல மாவட்டங்களையும் உள்வாங்கி புனர்வாழ்வு நிலையங்களை அமைக்க இருக்கிறோம். உங்கள் பிள்ளைகளை ஒப்படையுங்கள் அவர்களை கவனித்து மீண்டும் முன்பிருந்த நீங்கள் எதிர்பார்த்த பிள்ளையை உங்களிடம் ஒப்படைப்போம். இது தான் இன்றுள்ள பிரதானமான பணியாகும்.இந்தப் பணியை நாம் நிறைவு செய்யாவிட்டால் பொருளாதாரம்,சட்டத்தின் ஆட்சி, சிறந்த சமூகம், கல்வி,சுகாதாரம் உறுதிப்படுத்தப்பட்ட நாடு என்பன பயனற்றதாகவிடும். எனவே அரசாங்கம் என்ற வகையில் இந்த பேரழிவை இலங்கையில் இருந்து முற்றுமுழுதாக அழித்தொழிப்போம். ஆனால் இது இன்று கூட்டம் நடத்தி நாளை நிறைவு செய்யக் கூடிய செயற்பாடு அல்ல.

4,5 தசாப்தங்களாக தொடரும் இந்த பேரழிவுக்கு சிக்காத நகரங்களை தேட முடியாதுள்ளது. பலியாகாத குடும்பமொன்றை தேட முடியா நிலை ஏற்பட முன்னர் இந்த பேரழிவுக்கு முடிவு கட்ட வேண்டும்.

முன்னர் போதைப்பொருட்கள் விமான நிலையத்தின் ஊடாக சிறிய பொதிகளாக எடுத்து வரப்பட்டன. இன்று கொள்கலன்களில் வருகிறது. இவ்வாறு இந்தளவு வளர்ச்சி கண்டது? போதைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதனை ஒழிக்க இடைவிடாது தொடர்ச்சியான செயற்பாடு அவசியம். இதற்கு வெளிநாடுகளின் ஒத்துழைப்பை கோரியுள்ளோம். பலரை வெளிநாடுகளில் பிடித்துள்ளோம். இன்னும் பலர் வெளிநாடுகளில் கைதாகியுள்ளனர். இன்னம் சிலர் மறைந்துள்ளனர். அவர்களை பிடிக்க வேண்டும். இங்கு இரண்டாவது அடுக்காக இருக்கும் பிரதான விநியோக வலையமைப்பை ஒழிக்க வேண்டும். முழுமையான சுத்திகரிப்பை செய்வோம்.

இந்த செயற்பாட்டில் இருந்து சமூகத்தை திசைதிருப்ப சிலர் முயலலாம். உலகில் அவ்வாறு நடந்துள்ளது. போதைப்பொருள் வர்த்தகர்களை விடுவிக்க சில நாடுகளில் மக்கள் போராட்டம் கூட நடந்துள்ளது. தமது இருப்பிற்காக பல்வேறு வகைகளில் தமது பணத்தை பயன்படுத்துகின்றனர்.இந்த செயற்பாட்டை முடக்க பல்வேறு கோணங்களில் செயற்படலாம். மக்கள் போராட்டங்கள்,அரச விரோத செயற்பாடுகளை தூண்ட ,இல்லாத பிரச்சினைளை ஏற்படுத்த மறுபக்க முன்னெடுப்புகள் இடம்பெறும்.

இதற்கு எதிராக செயற்படும் அதிகாரிகளையும் குடும்பத்தினரையும்அச்சுறுத்தப்படுவது எமக்கு வெளியில் தெரியும்.அதே போல மறைமுகமாக செயற்படும் குழுக்களும் உள்ளன.அரசின் நோக்கத்தை திசைதிருப்பும் சதி நடக்கிறது. மக்கள் ஆர்ப்பாட்டத்தை பணம் கொடுத்து மேற்கொள்ளலாம். இது குற்றவாளிகளுக்கும் அதற்கு எதிரானவர்களுக்குமான போராட்டம் மாத்திரமல்ல. அதனுடன் பிணைந்த பொறிமுறைகள் உள்ளன. இதற்கு எதிரான நாசகார அரசியலை, அரசியலின் ஊடாக நாம் தோற்கடிப்போம். அதற்கு அரச அதிகாரிகள் தலையிடத் தேவையில்லை. அவர்களை நாம் பயன்படுத்த மாட்டோம். ஜனாதிபதியாக இந்த பணியை செய்வேன். கட்சித் தலைவராக நாசகார அரசியலை தோற்கடிக்கும் பணியை செய்வேன்.

தேசிய செயற்பாட்டை தடுக்கும் அரசியல் முன்னெடுப்பிற்கு எதிரான அரசியல் செயற்பாட்டை நாம் வேறாக மேற்கொள்வோம்.

போதைப் பொருட்களை பயன்படுத்தி ஆட்டம் போடும் குண்டர்களுக்கு தொழில்ரீதியான படையினர் அடிபணிய முடியுமா? அவர்களுக்கு உயிர் மீதான ஆசை கிடையாது. அவர்களில் ஒரே ஆயுதம் அது தான். அதில் தான் அவர்கள் எம்மை விட முன்னிலையில் இருக்கிறார்கள்.

அனைவரும் ஒன்றுபட்டால் இதனை துடைத்தெறிவோம். எமது செயற்பாடுகளை நாளுக்கு நாள் வேகப்படுத்த வேண்டும். அதற்குத் தேவையான தலைமைத்துவத்தை நாம் வழங்குவோம். பழைய ஆவணங்களை ஓரமாக வையுங்கள்.அது பழைய கதை. கடந்த காலத்தை கொண்டு அன்றி நிகழ்காலத்தை வைத்தே உங்களை அளவிடுவோம்.

அரசியல் அதிகாரம் மாறியுள்ளது. தேசிய பேரழிவில் இருந்து தேசத்தை மீட்பதற்கான செயற்பாட்டை கைவிடாமல் முன்னெடுப்போம். அதற்கான ஒன்றுபட அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை வெலிகத்த ஸ்ரீ குணாரங்லகார ஆராமாதிபதி பெரகம ஞானதிலக தேரர்

இந்த நாட்டை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து விடுவிப்பதற்கான நமது ஜனாதிபதியின் முயற்சிகளில், மதத் தலைவர்களாகிய நமக்கு பாரிய பொறுப்பு உள்ளது.
இந்த நாட்டில் போதைப்பொருள் விநியோக வலையமைப்பை ஒழிப்பதில் அவரும் அவரது குழுவும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அதற்காக செயற்படுகையில், தேரர்களாக எமக்கும், ஏனைய மதத் தலைவர்களுக்கும், உள்ள வகிபாகம் பாரியது. அந்த விநியோக வலையமைப்பை ஒழிக்கவும், அடக்குவதற்கும் அவர்கள் முயற்சிக்கும்போது, ​​போதைப்பொருட்களுக்கான தேவையை ஒழிக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. எனவே, போதைப்பொருட்களுக்கான தேவை வலையமைப்பை ஒழிக்கும் முயற்சியில் நாம் தீவிரமாக பங்களிக்க வேண்டும் என்றும், இந்த உன்னத நோக்கத்திற்கு நமது முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அனைத்து மதத் தலைவர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

ஜனாதிபதி அவர்களே, இதுபோன்ற பணிகளைச் செய்யும்போது நீங்கள் மட்டுமல்ல, புத்த பெருமானும் இதே போன்ற தடைகளைச் சந்தித்தார். புத்த பெருமானின் மேல் அதிருப்தி கொள்வதற்கான காரணங்கள் குறித்து கேட்கப்பட்டபோது, ​​விலங்குகளைக் கொல்லக்கூடாது என்று அவர் கூறும்போது, விலங்குகளைக் கொல்லும் குழு புத்தருக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்தது.

போதைப்பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று கூறப்பட்டபோது, ​​போதைப்பொருட்களை விற்கும் மற்றும் பயன்படுத்துபவர்களிடமிருந்தும் எதிர்ப்பு எழுந்தது. அப்படியானால், இந்தப் பணியில் ஜனாதிபதி உட்பட இவற்றுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு பல்வேறு தடைகள் ஏற்படக்கூடும். இந்த புண்ணிய பூமியில் நிலவும் மகிமையின் காரணமாகவே இந்த நாட்டை ஆள உங்களுக்கு அதிகாரம் கிடைத்தது.
அப்படி இல்லையென்றால், இவ்வாறு டொன் கணக்கில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருக்காது என்று நான் நம்புகிறேன். இந்தப் பணியை நீங்கள் உண்மையாகச் செய்து வருவதை நாங்கள் காண்கிறோம். அவ்வாறு செயற்படும்போது பாதிக்கப்பட்டவர்கள் தமது சொந்த இலாபத்துக்காக வழமை போல், மீண்டும் மதத்தைப் பயன்படுத்தி அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த முயற்சிப்பதை காண்கிறோம்.

ஒட்டுமொத்தமாக, இந்த நாட்டின் மரியாதைக்குரிய சங்கத்தினர் நிச்சயமாக உங்களுடன் இணைவார்கள். எந்தவொரு விவாதமும் இல்லாமல், மதத் தலைவர்களாகிய நாம், இந்த நாட்டை போதைப்பொருட்களின் அச்சுறுத்தலிலிருந்து காப்பாற்றும் உன்னத நோக்கத்திற்கு நிச்சயமாக பங்களிப்போம்.

உதாரணமாகக் கூறுவதென்றால், அசுத்தமான நீர் தேங்கிய இடம் போல இருந்த இலங்கையில், அரசியல் அதிகாரம் முதல், ஊழல், பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் ஆகியவை மிகவும் சக்திவாய்ந்ததாக காணப்பட்டது. அடைமழையில் அந்த இடம் சுத்தம் ஆகியதுபோல் ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்கள் மூலம் இந்த நாட்டின் அரசியல் அதிகாரம் தூய்மைப்படுத்தப்பட்டது. ஆனால் பாசிகள் போன்றவைகள் இன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை.

நமது நாட்டின் எஞ்சியவைகளையும் சுத்தம் செய்யும் வலிமை ஜனாதிபதிக்கு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். அதற்காக மதத் தலைவர்கள் என்ற முறையில் மகா சங்கத்தினர் தமது அதிகபட்ச ஆதரவை வழங்குவார்கள் என்று நான் தெரிவிக்கிறேன்.

நடிகை அனோஜா வீரசிங்க

இன்று, நமது ஜனாதிபதி, அரசாங்கம், முப்படைகள் மற்றும் பொலிஸார் நமது நாட்டை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து விடுவிக்க கடுமையாக உழைத்து வருகின்றனர். பிரஜைகளாக நாம் செய்யக்கூடியது, நம்மைச் சுற்றியுள்ள சூழலைப் பற்றி அவதானத்துடன் இருப்பதுதான். சமூக ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டிய நேரமாக நான் இதைப் பார்க்கிறேன். எனது பிள்ளை, எனது வீடு என்றில்லாமல் சமூகத்தைப் பற்றியும் அவதான மாக இருக்க வேண்டும். எமது சிறு வயதில், ஒரு சிறிய வீடு, பெரிய குடும்பம் இருந்தது. இன்று, பல அறைகள் கொண்ட ஒரு பெரிய வீட்டில், அறைகளில் தனியாக இருக்கிறோம். அறைகளின் கதவுகள் மூடப்பட்டிருக்கும் போது, ​​பிள்ளை என்ன செய்கிறது என்று நமக்குத் தெரியாது.

இன்று காணொளிகளில் காட்டிய நிகழ்வுகள் தொடர்பான பல ஆய்வுகள் என்னிடம் இருக்கின்றது. சில பெற்றோர்கள், பிள்ளைகளைப் புரிந்து கொள்ளாமல், அதிக பணம் செலவழித்து, கல்வி கற்க வெளிநாடுகளுக்கு அனுப்புகிறார்கள். மூன்று மாதங்கள் செல்வதற்குள், பிள்ளை முற்றிலும் அழிந்து திரும்புகிறது. இந்த நாட்டில், கொஞ்சம் பாதிக்கப்பட்டந்திருந்த பிள்ளையை சரி செய்ய வெளிநாட்டிற்கு அனுப்புகிறார்கள். அந்தப் பிள்ளை சீர்செய்ய முடியாத அளவுக்கு முழுமையாக அழிந்து, திரும்பி வருகிறது. அதனால் முழுக் குடும்பமும் பாதிக்கின்றது.

நம் குடும்பத்தை நாம் புத்திசாலித்தனமாக நிர்வகித்து வருகிறோமா என்று சிந்திக்க வேண்டும். இப்போது இந்தப் பேரழிவு ஏராளமானவர்களின் பங்கேற்புடன் பரவிவிட்டதால், அதனை ஒழிக்க நம்மால் முடிந்த அளவு பங்களிக்க வேண்டும். கட்சி, அரசாங்கம் எதுவாக இருந்தாலும் செய்யும் செயல் நமக்கானது என்றால், ஏன் பின்வாங்குகிறோம்? நம் பிள்ளைகள் அழிக்கப்படும் வரை பின்வாங்குகிறோமா? பிள்ளைகள் இல்லாத நாடு, இளைஞர்கள் இல்லாத நாட்டை எடுத்து வயதாகிய எம்மைப் போன்றவர்களுடன் என்ன செய்ய முடியும், நாமும் சிறிது காலத்தில் இறந்துவிடுவோம். இவ்வாறு சென்றால், அனைவரும் அழிவதைத் தவிர இந்த நாட்டைக் கட்டியெழுப்ப யாரும் இருக்க மாட்டார்கள்.

மகாசங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்கள், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் பி. ருவன் செனரத், காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத், பாராளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பத்தி, சதருவன் மதரசிங்க, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் பாதுகாப்புப் படைகளின் பிரதிநிதிகள், உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles