குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க எதிரணி முயற்சி – பதறுகிறார் மொட்டு கட்சி எம்.பி.

உள்ளூராட்சி மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். அதில் மாற்றுக்கருத்து கிடையாது என்றாலும் நாடு தற்போது எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியில் உள்ளூராட்சி தேர்தல்களை நடத்த முடியாத சூழலில் எதிர்க்கட்சி உட்பட பலதரப்புகள் வற்புறுத்துவது தேவையற்ற செயற்பாடாகும் என மாத்தளை மாவட்ட பொதுஜன பெரமுன பா.உ ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்

உள்ளூராட்சி மாகாண சபை தேர்தல்கள் சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினரின் தம்புள்ளை இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து பேசிய அவர்,..

கொவிட் 19 காரணமாக நமது நாடு பல மாத காலமாக முடக்கப்பட்டிருந்த நிலையில் நாட்டில் எந்தவித அபிவிருத்தி பணிகளும் மேற்கொள்ள முடியாது பொது மக்களின் பொருளாதாரம் முற்றும் பாதிக்கப்பட்டிருப்பதை அரசு மாத்திரம் அல்லாமல் எதிர்க்கட்சிகளும் இதை நன்றாக புரிந்து வைத்திருக்க வேண்டும்.

பல சவால்களை எதிர்கொண்ட நமது நாடு மெதுமெதுவாக மீளெழுந்து வருகின்றது. விவசாயிகள் எதிர்நோக்கிய பசளை, சமையல் எரிவாயு போன்ற பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்படும் நேரத்தில் உள்ளூராட்சி சபை தேர்தல்களை நடத்த கோடிக்கணக்கான ரூபாய் தேவைப்படுவதால் இதற்கு செலவு செய்யக்கூடிய பணத்தை முக்கிய தேவைகளுக்கு பயன்படுத்தலாம்.

உள்ளூராட்சி மாகாண சபை தேர்தல்கள் நடத்த வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தே கிடையாது. தேர்தலை நடத்தி கோடிக்கணக்கான ரூபாய்களை செலவு செய்யும் காலமல்ல. சில கட்சிகள் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க பார்க்கின்றனர்.சந்தர்ப்பவாத அரசியலை எதிர்க் கட்சியினர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

Related Articles

Latest Articles