பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சட்டத்தில் உள்ள தடைகளை அகற்றி, கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தை அதன் கீழ் கொண்டு வரப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொவிட் – 19 ஒழிப்புக்குத் தடுப்பூசி ஏற்றுதல் உள்ளிட்ட அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டம் தொடர்பில், பௌத்த மஹா சங்கத்தினருக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று தெளிவுபடுத்தினார். இதன்போதே மேற்கண்டவாறு கூறினார்.
“கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகமானது, 40 வருட காலமாக நாட்டுக்குத் தேவையான பெரும் எண்ணிக்கையான கல்விமான்களை உருவாக்கியுள்ளது. உயர்தரப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளுடன் சித்தியடைகின்ற மாணவர்கள்கூட, கொத்தலாவல பல்கலைக்கழகத்தைத் தங்களது உயர்க் கல்விக்காகத் தெரிவு செய்வதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்” என்றும், ஜனாதிபதி குறிப்பிட்டார்.
உயர் கல்விக்காக தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதன் மூலம், நாடும் பெற்றோர்களும் இழக்க வேண்டி ஏற்படும் பாரிய தொகையைச் சேமிக்க வேண்டுமானால், உயர்ந்த தரம் வாய்ந்த இத்தகைய பல்கலைக்கழகங்கள் நாட்டில் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சட்டத்தில் உள்ள தடைகளை அகற்றி, கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தை அதன் கீழ் கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பெளத்த ஆலோசனைச் சபையின் உறுப்பினர்களான மஹா சங்கத்தினர், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, அமைச்சுக்களின் செயலாளர்கள், அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்டோர், இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.










