” தற்போதைய சூழ்நிலையில், சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல முடியாது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டுமானால் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த நேரிடும். எனவே, அதற்கு வழிவகுக்காத வகையிலேயே 21 நிறைவேற்றப்படும்.”
இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார் .
அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் உட்பட அநுநாயக்க தேரர்களை சந்தித்து, 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலகினால், அடுத்த ஜனாதிபதியை நாடாளுமன்றம் தெரிவுசெய்ய வேண்டும். நாடாளுமன்றத்தில் தற்போது மொட்டு கட்சி வசமே பெரும்பான்மை பலம் உள்ளது. எனவே, அடுத்த ஜனாதிபதி குறித்த ஐயப்பாடு உள்ளது. பஸில் தெரிவாகக்கூடும்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டுமானால் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல நேரிடும். எனவே, 21 ஐ ஆரம்ப புள்ளியாக கருதலாம்.
இரட்டை குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு தடை விதிக்கப்படும். இது தொடர்பில் அழுத்தங்கள் வருகின்றன. எனினும், கொள்கை ரீதியில் எடுக்கப்பட முடிவு மாறாது. அந்த நபர்தான் பொருளாதாரத்தை சீரழித்தார். தனது சகோதரராக இருந்தால்கூட அவரை அமைச்சு பதவியில் இருந்து ஜனாதிபதி நீக்கினார்.” – எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.
