வரலாற்றுச் சிறப்புமிக்க திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயப் பகுதியில் ஆலயத்தின் புனிதத்தைப் பாதிக்கும் வகையிலான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
இந்த விடயத்தை ஊடகச் செய்திகள் மூலம் அறிந்து கொண்டதாக இதன்போது தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நியாயமான முறையில் விடயம் அணுகப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் மத விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சரும் இணைந்து திருகோணமலைக்கு நேரடியாகச் சென்று நிலைமைகளை ஆராய்வதுடன் ஆலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடி, இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுமாயின் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.










