பசறை பகுதியின் கோணக்கலை பெருந்தோட்ட மேற்பிரிவு தொழிலாளர்கள் தமக்கு மானிய விலையில் கோதுமை மாவினை வழங்கக்கோரி, போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
கடந்த மாதம் (ஜனவரி 2022) கோணக்கலை பெருந்தோட்ட மேற்பிரிவு தொழிலாளர்களுக்கு கோதுமை மா கிலோவொன்றிற்கு 80 ரூபா என்ற மானிய விலையடிப்படையில் 15 கிலோகிராம் கோதுமை மா வழங்கப்படுமென்று 1200 ரூபாப் பணம் கழிக்கப்பட்டுள்ளது.
இக் கழிவு தொழிலாளர்களின் சம்பளப் பட்டியலிலும் உணவு என்ற பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட கோதுமை மா இதுவரை வழங்கப்படவில்லை.
தோட்ட நிருவாகத்திடம் இதுபற்றி வினவிய போது கழிக்கப்பட்ட 1200 ரூபாவுக்கான கோதுமை மா கிடைத்ததும், தொழிலாளர்களுக்கு வழங்கப்படுமென்றும், தொழிலாளர்களின் சம்பளப்பட்டியலில் ‘உணவு’ என்பதற்கு கழிக்கப்பட்ட 1200 ரூபா பணம் கோதுமை மா வழங்குவதற்கேயாகுமென்றும் தோட்ட நிருவாகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கோதுமை மாவிற்கு பிடிபட்ட 1200 ரூபாவை மீண்டும் வழங்கவும் தோட்ட நிருவாகம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. .
தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா தினச் சம்பள உயர்வோ, அரசு கூறிய பிரகாரம் மானிய விலையில் கோதுமை மாவோ தமக்கு கிடைக்கவில்லையென்று தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
பெருந்தோட்டத் தொழிலாளர் சமூகம் ஆரம்பம் முதல் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்ட சமூகமாகவே இருந்து வருகின்றது. அச் சமூகத்தினை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல், தொழிற்சங்க தலைமைகளும் வாய்மூடி மௌனிகளாகவே இருந்து வருகின்றனர். அத்தலைமைகளும் பெருந்தோட்டத் தொழிலாளர் சமூகத்தினை ஏமாற்றி வருவது குறித்து, தொழிலாளர் சமூகத்தினர் பெரும் கவலையைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆயிரம் ரூபா தினச்சம்பள உயர்வினை, பெருந்தோட்டக் கம்பனிகள் சில ஏற்றுக்கொள்ளவில்லை. சில கம்பனிகள் தொழிலாளர்களின் நாளாந்த வேலைகளை பன் மடங்காக அதிகரித்துள்ளமை, நாளாந்தம் கொய்யப்படும் தேயிலைத் தளிர்களின் எடைகளையும், தோட்ட நிருவாகங்கள் அதிகரித்துள்ளன. கொய்யப்படும் தேயிலைத் தளிர்களின் எடைகளுக்கேற்ப சம்பளம் வழங்கும் திட்டமும் அமுல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
குறிப்பாக பெருந்தோட்டங்களில் தேயிலைத் தளிர்களை நிறுக்கும் தராசுகளையும் பரிசோதிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டிருக்கின்றது. முறையாக தேயிலைத் தளிர்கள் நிறுக்கப்படுகின்றனவாவென்ற சந்தேகங்களும் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளன.
நிதி அமைச்சர் பெசில் ராஜபக்சவின் நிவாரணப் பொதித் திட்டத்தில் கடந்த 4ந் திகதி கோதுமை மா ஒரு கிலோ கிராம் 80 ரூபா என்றடிப்படையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 15 கிலோகிராம் வழங்கப்படுமென்று கூறப்பட்டிருந்த போதிலும் அக் கோதுமை மா இதுவரை பதுளை மாவட்ட பெருந்தோட்டத் தொழிலாளர் சமூகத்திற்கு கிடைக்கவில்லை. அத்திட்டம் ஏட்டளவில் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது.
தற்போது சம்பளப் பட்டியலிலும் புகுத்தப்பட்டு, அதற்குரிய பணமும் கழிக்கப்பட்டும், தோட்டத் தொழிலாளர்களுக்கு கோதுமை மா கிடைக்கவில்லை. இது போன்று பல்வேறு வழிகளிலும் அத் தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வந்தது போதும், இனியாவது அவர்களுக்குரிய நியாயம் கிடைக்க வேண்டும். ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்படல் வேண்டும். மானிய விலையில் கோதுமை மா வழங்கப்படல் வேண்டும். கோதுமை மாவுடன் மட்டும், அச் சமூகத்தை மட்டுப்படுத்தப்படக்கூடாதென்றும், அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
எம். செல்வராஜா, பதுளை










