“ நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றி உறுதியாகும். இவ்வெற்றியின் மூலம் எமது தலைவர் சஜித் பிரேமதாச பிரதமராக பதவியேற்பார். அவர் ஆட்சியில் அமைச்சராவதற்கு அனைத்து தகுதிகளும் எனக்கு உள்ளது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
பசறை வாரச்சந்தைத் தொகுதியில் இன்று 23.07.2020ல் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது வடிவேல் சுரேஷ் மேலும் கூறியவை வருமாறு,
“200 வருடமாக வரலாற்றினைக் கொண்ட எமது உறவுகளுக்கென்று கடந்த நான்கரை வருடங்களுக்கு என்னால் இயன்ற வகையில்இ பலகோடி ரூபா செலவில் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருக்கின்றேன். இந்நிலையில் மீளவும் பொதுத்தேர்தலை எதிர்கொண்டிருக்கின்றேன்.
என்னால் மேற்கொள்ளப்பட்ட மக்கள் பணிகளை தொடர்வதற்கு மக்களின் அங்கீகாரத்தைக்கோரியே இத்தேர்தலை எதிர்கொள்கின்றேன். அதற்கென்ற ஆதரவையும்,அங்கீகாரத்தையும் எனது தொப்புள் கொடி உறவுகள் வழங்குவார்களென்ற அபார நம்பிக்கை எனக்குண்டு.
என்னிடம் ஊழல்கள், மோசடிகள் எதுவும் இல்லை. தூய்மையான கரங்களைக் கொண்டு உணர்வூர்வமாக எம்மக்களுக்காக பணியாற்றி வருகின்றேன்.
இக்கூட்டத்தை நடாத்துவதற்கு பசறை பொது மைதானத்தை தருமாறு கோரினோம். சம்பந்தப்பட்டவர்கள் தர மறுத்து விட்டனர். பின்னர் பிரதேச மண்டபத்தை தருமாறு கோரிக்கை விட்டோம். அதுவும் கிடைக்கவில்லை இறுதியில் செய்வதியாத நிலையில் பசறை சந்தைத் தொகுதியில் இக்கூட்டத்தை நடாத்தினோம்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது தலைவர் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றிருப்பார். அவருக்கு ஏற்படுத்திய சதி மற்றும் சூழ்சிகளினாலேயே அவர் தோல்வி கண்டார். ஆனால் இம்முறை அச்சதி சூழ்ச்சி ஆகியவற்றை முறியடித்து அமோக வெற்றி பெறுவார். அவ்வெற்றியின் மூலம் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் ஶ்ரீகொத்தவும் எமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும்.” – என்றார்.
எம். செல்வராஜா, பதுளை