சலுகைகளுக்கு அடிபணிந்து ‘டீல்’ அரசியல் நடத்தமாட்டோம்!

“ஐக்கிய தேசியக்கட்சியுடன் எமக்கு எவ்வித ‘டீல்’ அரசியலும் கிடையாது.” – என்று ஜே.வி.பியின் தலைவரும், தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது கருஜயசூரிய போட்டியிட்டிருந்தால் தமது வேட்பாளரை தேசிய மக்கள் சக்தி விலக்கிக்கொள்ளவிருந்தது என முன்வைக்கப்படும் கருத்தை நான் முழுமையாக நிராகரிக்கின்றேன். எமது அணியே முதலாவதாக மக்கள் மத்தியில் வேட்பாளரை அறிவித்தது. பின்வாங்குவதற்காக இருந்தால் எதற்காக அறிவிப்பு விடுக்கவேண்டும்?

அதேபோல் இரண்டாம் விருப்பு வாக்கு தொடர்பிலும் எம்மை தொடர்புபடுத்தி சிலர் கருத்து வெளியிட்டுவருகின்றனர். இரண்டாம் வாக்கை இவருக்கு வழங்குமாறு எவரின் பெயரையும் நாம் பரிந்துரைக்கவில்லை. கற்பனை அடிப்படையிலேயே இவ்வாறான கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியுடன் எமக்கு எவ்வித அரசியல் டீலும் கிடையாது. மக்களுக்காக கொள்கை அடிப்படையிலேயே அரசியல் நடத்திவருகின்றோம். மக்கள் பக்கம்நின்று தீர்மானங்களை எடுப்போமேதவிர சலுகைகளுக்காக ஒருபோதும் அடிபணிந்து முடிவுகளை எடுத்ததில்லை. இனி எடுக்கபோவதுமில்லை.

நாம் உயிரை பணயம் வைத்து அரசியல் நடத்துகின்றோம். ஆனாலும் எமது பயணத்தை தடுப்பதற்கும், மக்கள் மத்தியில் தவறான கருத்தை பரப்புவதற்காகவுமே என்ஜிஓ, டொலர் போன்ற கதைகள் எல்லாம் கூறப்பட்டுவருகின்றன.

நாடாளுமன்றத்தில் நாம் பலமான சக்தியாகவேண்டும். அதற்கான ஆணையையே மக்களிடம் கேட்கின்றோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles