சிரிய கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது பல ரொக்கெட் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதை அடுத்து சிரியாவின் பல இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது.
கோலன் குன்றில் சிரியாவில் இருந்து ஆறு ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டதை அடுத்து சிரிய இராணுவ வளாகம் மற்றும் ரொக்கெட் ஏவு கருவிகள் மீது பீரங்கிகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
இதில் மூன்று ரொக்கெட் குண்டுகள் இஸ்ரேலிய பகுதிக்குள் நுழைந்ததோடு ஒன்று இடைமறிக்கப்பட்ட நிலையில் இரண்டு திறந்த வெளிப் பகுதியில் விழுந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சிரிய பாதுகாப்பு அமைச்சு பேஸ்புக்கில் இந்தத் தாக்குதலை உறுதி செய்துள்ளது.
இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு வான் பாதுகாப்பு அமைப்பு பதிலளித்ததாகவும் சில ஏவுகணைகள் வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டதாகவும் சிரிய பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றும் பொருட்சேதம் மாத்திரமே ஏற்பட்டதாகவும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் ஈரான் ஆதரவு பலஸ்தீன இஸ்லாமி ஜிஹாத் அமைப்பின் ஆயுதப் பிரிவான அல் குத்ஸ் படையணி இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு பொறுப்பேற்றதாக லெபனான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெரூசலம் அல் அக்ஸா பள்ளிவாசலுக்குள் இஸ்ரேலிய படை கடந்த வாரம் ஊடுருவிய சம்பவங்களைத் தொடர்ந்தே பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.










