வட்டவளை, டெம்பல்ஸ்டோவ் தோட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவனை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் எனக் கூறப்படும் பிக்குளை, எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி அசங்கா ஹெட்டிவத்த இன்று (23.02.2022) உத்தரவிட்டார்.
வட்டவளை, ஹயிற்றி தோட்டத்திலுள்ள விகாரையில் வைத்தே கடந்த 20 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றதாகவும், 21ஆம் திகதி குறித்த சிறுவனின் தந்தை வட்டவளை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்ததாகவும் வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, 21ஆம் திகதி மாலை வட்டவளை பொலிஸாரால் பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார். அதனையடுத்து, 22ம் திகதி மேற்படி சிறுவனுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், பிக்குவிற்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என குறித்த தோட்டத்தில் பொது மக்களால் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த பிக்கு இன்று பொலிஸாரால் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதி குறித்த பிக்குவை எதிர்வரும் 28 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
