சீனாவில் ‘நாய் இறைச்சி திருவிழா’ ஆரம்பம்!

சீனாவில் யூலின் பிரதேசத்தில் வருடாந்தம் ஜூன் மாதம் நடைபெறும் நாய் இறைச்சி திருவிழா கோலாகலமாக ஆரம்பித்துள்ளது.

இந்தத் திருவிழாவில் பெருந்தொகையான நாய்கள் வெட்டப்பட்டு, பல்வேறு முறைகளில் சமைத்து பரிமாறப்படும். சுமார் பத்து நாட்களுக்கு நடைபெறும் இந்தத் திருவிழாவுக்கு அலைமோதும் நாய் இறைச்சி பிரியர்கள், விதம் விதமாக நாய் இறைச்சிகளை அவித்தும் பொரித்தும் வதக்கியும் சுட்டும் சாப்பிடுகின்றனர்.

நாய்களை கொன்று தின்னுவது மகா கொடுமை என்றும் அரியண்டம் மிக்க இந்த திருவிழாவும் பாரம்பரியமும் நிறுத்தப்படவேண்டும் என்றும் விலங்குகள் நல அமைப்புக்கள் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வருகின்றபோதும் – “ஆடு, மாடு, பன்றி போன்றவற்றை கொன்று தின்னுவதைப்போல இதுவும் இன்னொருவகை மிருக இறைச்சி. அவ்வளவுதான்.

இறைச்சிக்காக கொல்லப்படும் நாய்கள், அதிக வலி ஏற்படாதவகையில் சாகடிக்கப்படுகின்றன” என்று இந்த திருவிழாவின் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளார்கள்.

கடந்த 2020 ஆம் ஆண்டு பெப்ரவரியில் – கோவிட் தொற்று பரவலடையத்தொடங்கியிருந்த காலப்பகுதியில் – மிருகங்களிலிருந்து மனிதனுக்கு கோவிட் தொற்று ஏற்படுவதாக நம்பப்பட்ட காலகட்டத்தில் – சீனாவில் நாய் இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டது.

ஆனால், தற்போது அந்த அச்சம் நீங்கி, நாய் இறைச்சி பிரியர்கள் மீண்டும் இப்படியான திருவிழாக்களை நோக்கி படையெடுப்பது மாத்திரமல்லாமல், கள்ள நாய்கள் பிடித்து, அடித்து, இறைச்சியை பங்கு போடுவதற்கும் ஆரம்பித்துவிட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இப்படியிருக்க, இன்னொரு பக்கம், பல லட்சக்கணக்கான சீனர்கள், நாய் இறைச்சியை தடைசெய்யுமாறு அரசுக்கு விண்ணப்பித்துள்ளது மாத்திரமல்லாமல், கையெழுத்து வேட்டை நடத்தி முக்கிய கட்சிகளின் ஊடாகவும் அரசின் பார்வைக்கு அனுப்பியபடியுள்ளனர்.

இப்படியான நாய் இறைச்சி திருவிழாக்களுக்கு கொண்டு செல்லப்படும் நாய்களை மீட்டுள்ளனர். இம்முறையும் யூலின் நகருக்கு கொண்டுசெல்லப்பட்டுக்கொண்டிருந்த நாய் வண்டிலொன்றை மறித்து, அதிலிருந்து பல நாய்கள் மீட்கப்பட்டிருக்கின்றன.

ஆனால், இவை எல்லாவற்றிற்கும் மேலாக, சீனாவில் தொடர்ந்து நாய்கள் இறைச்சிக்காக லட்சக்கணக்கில் கொல்லப்படுகின்றன என்கிறது அரசுத்தகவல். 2020 ஆம் ஆண்டு தரவுகளின்படி, சீனாவில் ஒவ்வொரு வருடமும் ஒரு கோடி நாய்கள் இறைச்சிக்காக கொல்லப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles