ஜனாதிபதியின் பதவிகாலம் முடியும் காலப்பகுதி தொடர்பில் உயர்நீதிமன்றம் பொருட்கோடல் வழங்கும்வரை, ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை உத்தரவு விதிக்ககோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு, விசாரணையின்றி உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் ஐவரடங்கிய நீதியரசர் குழாமினால் குறித்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஜனாதிபதியின் பதவிகாலம் முடிவடையும் திகதி தொடர்பில் உயர்நீதிமன்றத்திடம் சட்ட வியாக்கியானம் கோரி தொழிலதிபர் ஒருவரால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த மனுவுக்கு எதிராக இடையீட்டு மனுக்களும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
மனுதாரர் வழக்கு கட்டணமாக ஒரு லட்சம் ரூபாவை செலுத்த வேண்டும்.
இந்நிலையில் ஜனாதிபதியின் பதவிகாலம் ஐந்தாண்டுகளே என சட்டமா அதிபர் இன்று உயர்நீதிமன்றத்திடம் சுட்டிக்காட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
