ஜூன் 7ஆம் திகதி வரை முடக்கம் நீடிப்பு

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நாளை அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமே தவிர, நீக்கப்படாது என்று இலங்கையின் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் ஜூன் மாதம் 4ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மீண்டும் இரவு 11 மணிக்கு பயணக் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மே மாதம் 28ஆம் திகதி வரையே பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டிருந்தன.

கொவிட் நெருக்கடியைக் கையாள்வது குறித்து ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற விசேட கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாளை பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் போது குடும்பத்தில் இருந்து ஒருவர் மட்டும் வெளியே சென்று தேவையான பொருட்களை கொள்வனவு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தியாசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான விற்பனை நிலையங்களும், பொருளாதார மத்திய நிலையங்கள் மட்டுமே நாளை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முடுக்கப்படும் சந்தர்ப்பத்தில் அன்றாடம் தொழில் செய்து வாழ்க்கை நடத்தும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

26,27,28,29, 30 ஆம் திகதிகளில் பயணத்தடை முழுமையாக அமுலில் இருக்கும். 31 ஆம் திகதி காலை 4 மணிக்கு பயணத்தடை தற்காலிகமாக தளர்த்தப்படும்.

31 ஆம் திகதி இரவு 11 மணி முதல் ஜுன் 3 ஆம் திகதி காலை 4 மணிவரை பயணத்தடை அமுலில் இருக்கும்.

4 ஆம் திகதி காலை பயணக்கட்டுப்பாடு தற்காலிகமாக தளர்த்தப்படும். அன்றிரவு 11 மணி முதல் ஜுன் 6 ஆம் திகதிவரை பயணத்தடை நடைமுறையில் இருக்கும். 7 ஆம் திகதி காலை 4 மணிக்கு தளர்த்தப்படும்.

பயணத்தடை தளர்த்தப்பட்டாலும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வீட்டிலிருந்து ஒருவர் மட்டுமே அதுவும் அருகிலுள்ள கடைக்கு அல்லது நகருக்கு செல்ல வேண்டும்.

மருந்தகங்கள் திறக்கப்படும்.

மதுபானசாலைகள் பூட்டப்பட்டிருக்கும்.

விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி.

நடமாடும் பொருட்கள் விநியோக சேவையை முன்னெடுக்க அனுமதி.

Related Articles

Latest Articles