டெல்லி கார் வெடிப்புச் சம்பவத்தில் நடந்தது என்ன?

டெல்லி செங்கோட்டை அருகே சிக்னலில் நின்ற கார் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்ததை அடுத்து, மும்பை, சென்னை உட்பட நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

டெல்லி செங்கோட்டை பகுதியில் நேற்று மாலை 6.30 மணி அளவில் வாகனங்கள் வழக்கம்போல சென்றுகொண்டு இருந்தன. அப்போது, சிக்னலில் நின்ற கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில், அருகே நின்றிருந்த சிலகார்களிலும் தீப்பிடித்தது. இதில் 13 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்சா கூறும்போது, “மாலை 6.52 மணி அளவில் செங்கோட்டை பகுதியின் கவுரி சங்கர், ஜெயின் கோயில்களுக்கு அருகே மெதுவாக சென்ற கார் ஒன்று சிக்னலில் நின்றுள்ளது. அப்போது அந்த கார் வெடித்துச் சிதறியுள்ளது. இதில் அருகே இருந்த கார்கள் 150 மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. டெல்லி போலீஸ், என்ஐஏ, என்எஸ்ஜி அமைப்புகள் ஒன்றிணைந்து விசாரணை நடத்தி வருகின்றன” என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, டெல்லி போலீஸாரும், தீயணைப்பு படை வீரர்களும் விரைந்து வந்து, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஏராளமானோர் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகேகடை நடத்தி வரும் ஒருவர் கூறும்போது, ‘‘பயங்கர சத்தத்துடன் கார்கள் வெடித்துச் சிதறி தூக்கிவீசப்பட்டன. பல கி.மீ. தூரம் சத்தம் கேட்டது. கடையில் இருந்த நான் அதிர்வு காரணமாக கீழே விழுந்துவிட்டேன்’’ என்றார்.

அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த ராஜ்தர் பாண்டே கூறும்போது, “எனது வீடு வரைவெடிப்பின் அதிர்வை உணர முடிந்தது. அந்த பகுதி முழுவதும் தீப்பற்றி எரிந்தது’’ என்று தெரிவித்தார். டெல்லி போலீஸார் கூறும்போது, ‘‘காரில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முழுமையான விசாரணைக்கு பிறகே கார்கள் வெடித்துச் சிதறியதற்கான காரணம் தெரியவரும்’’ என்று தெரிவித்தனர்.

எனினும், சதிச் செயலாக இருக்கக்கூடும் என்ற அச்சத்தால் டெல்லி முழுவதும் உச்சபட்ச உஷார்நிலை பிறப்பிக்கப்பட்டது. அனைத்து பகுதிகளும் காவல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

மோடி, அமித் ஷா ஆலோசனை: இந்நிலையில், டெல்லியில் நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சகத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மூத்த அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தி,முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தார். பின்னர், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியஅவர், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவரித்தார். டெல்லிகாவல் ஆணையர் சதீஷ் கோல்சாவையும் அமித் ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அமித் ஷா கூறும்போது, “டெல்லி செங்கோட்டை அருகே சுபாஷ் மார்க் சிக்னல் அருகே கார் வெடித்துச் சிதறி உள்ளது. இதில் அருகே காரில் சென்றவர்கள், நடைபாதையில் நடந்து சென்றவர்கள் உயிரிழந்துள்ளனர். 10 நிமிடங்களுக்குள் டெல்லி போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்றுவிட்டனர். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும்’’ என்று தெரிவித்தார்.

டெல்லியின் அண்டை மாநிலங்களான உத்தர பிரதேசம், ஹரியானா மட்டுமின்றி, மகாராஷ்டிரா, பிஹார், மேற்கு வங்கம், தமிழகம், கர்நாடகா உட்பட நாடு முழுவதும் காவல் துறையினர் உஷார்படுத்தப்பட்டனர். மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் சோதனை, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. தமிழக சட்டம் – ஒழுங்கு டிஜிபி (பொறுப்பு) வெங்கடராமன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அனைத்து மண்டல ஐ.ஜி.க்கள், காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி.களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, சென்னை, கோவை, திருச்சி,மதுரை, சேலம், நெல்லை உட்பட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடல் வழி பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரயில், பேருந்து, விமான நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பல பகுதிகளிலும் நேற்று இரவு தீவிர வாகனசோதனை நடைபெற்றது.

Related Articles

Latest Articles