“ ராஜபக்சக்கள் தற்போது இல்லை, எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றுடன் பேச்சு நடத்தி ஆதரவை பெற்றுக்கொள்ளுங்கள்.”
இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசுவாசிகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார் மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்ச.இது தொடர்பில் அவர் நேற்று கூறியவை வருமாறு,
“ ராஜபக்சக்கள் இருப்பதால் தமிழ், முஸ்லிம் கட்சிகள் ரணிலுக்கு ஆதரவு வழங்கவில்லை என முன்னர் கூறிவந்தனர். ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்களும் வருவதில்லை எனவும் குறிப்பிட்டனர். தற்போது நாங்கள் இல்லை, தமிழ்க் கூட்டமைப்பினருடன் கதைத்து ஆதரவைப் பெறுங்கள், ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதிவுதீன் உள்ளிட்டவர்களுடன் பேச்சு நடத்தியும் ஆதரவை கோருங்கள்.
மொட்டு அணியினர் சிங்கள பௌத்த சிந்தனை மற்றும் இடதுசாரி கொள்கை உடைய தரப்பு என்பதால்தான் அவர்கள் வருவதில்லை என்றுதானே கூறீர்கள், இப்போது அதற்கான தடை இல்லையே?
எங்களுக்கும் கணக்கு காட்ட தெரியும். அன்று நாம் ஜனாதிபதிக்கு ஆதரவளித்தபோது அந்த முடிவை விமர்சித்தவர்களே இன்று ஜனாதிபதி பக்கம் உள்ளனர். நானும் ஜனாதிபதியை ஆதரிக்கும் முடிவை எடுத்திருந்தால் சிறந்த தலைவர் என போற்றி இருப்பார்கள். ஆனால் கட்சி முடிவுடன் நான் இருப்பதால் விமர்சிக்கின்றனர். எனக்கு தனி நபர்கள் பற்றி கவலை இல்லை. கொள்கையே முக்கியம்.” – என்றார்.
