நாடு எதிர்நோக்கியுள்ள பாதிப்புக்களிலிருந்து, நாட்டையும், நாட்டு மக்களையும் மீட்கும் நோக்குடன் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு, இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவிக்கின்றார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்ற உறுப்பினராக சத்திய பிரமாணம் செய்துள்ளமை தொடர்பில், எஸ்.ஆனந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் பரவல் காரணமாக நாடு பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளதுடன், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புக்களினால் இலங்கையின் கடல் வளம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
அதேபோன்று, நல்லாட்சி காலத்தில் பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டு பெற்றுக்கொண்ட, இலங்கை ஏற்றுமதி துறைக்கு பாரிய பங்களிப்பை செய்யும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையும் இன்று இல்லாது போகும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
மேலும், டொலரின் பெறுமதி தொடர்ச்சியாக பாரிய வீழ்ச்சி அடைந்து வரும் அதேவேளை, நாட்டிற்கு கிடைக்கும் அந்நிய செலாணியும் பாரியளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
கொவிட் பரவலுக்கு மத்தியில் சுற்றுலாத்துறை என்றும் இல்லாத அளவிற்கு பாதாளத்திற்கே வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்க வேண்டிய நிதியுதவிகளும் தற்போது கிடைக்காத சூழ்நிலை உருவாகியுள்ளதாக எஸ்.ஆனந்தகுமார் குறிப்பிடுகின்றார்.
நாட்டின் தலைசிறந்த தலைவராக விளங்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு, சர்வதேச ரீதியிலுள்ள காணப்படும் செல்வாக்கு மாத்திரமே, இலங்கையையும், இலங்கை மக்களையும் இன்று காப்பாற்றும் என அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.
பாதாளத்திற்கு வீழ்ந்த நாட்டை மீட்கும் பொறுப்பை இன்று ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளமையினாலேயே, அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராக சத்திய பிரமாணம் செய்துக்கொள்கின்றார் என அவர் குறிப்பிடுகின்றார்.
அரசாங்கம் செய்ய வேண்டிய பொறுப்பை, தனியொரு மனிதராக, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்திலிருந்து நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இன்று அனைவரது மனங்களிலும் எழுந்துள்ளதாக அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை உள்நாட்டில் மாத்திரமன்றி, சர்வதேச ரீதியிலும் வீழ்ச்சி கண்டுள்ளதை இன்று அனைவராலும் காண முடிகின்றது என அவர் கூறுகின்றார்.
அதனால், சர்வதேசமே ஏற்றுக்கொண்ட ஒரே தலைவரான ரணில் விக்ரமசிங்க, இன்று பாராளுமன்ற உறுப்பினராக சத்திய பிரமாணம் செய்துகொண்டதன் ஊடாக, நாடு சூபிட்சத்தை நோக்கி நகரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவிக்கின்றார்.










