” தமிழ் முற்போக்கு கூட்டணி ஒழுங்காக அரசியல் செய்திருந்தால், நாம் அரசியலுக்கு வரவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. சொகுசு வாழ்க்கையை விரும்பிய முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள், மலையக மக்கள் தொடர்பில் சிந்திக்கவில்லை.” என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” நான் பரசூட் வேட்பாளர் என்று தொலைபேசியில் வாக்குகேட்கும் முன்னாள் அமைச்சர் ஒருவர் கருத்து வெளியிட்டுவருகின்றார். நான் இலங்கை நாட்டுப்பிரஜை. எங்குவேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம்.அது எனது உரிமை.
தான் லயத்தில் இருந்து வந்தவர் எனவும் அவர் கூறுகிறார். ஆனால் கொழும்பில்தான் வாழ்கின்றார். அவரின் மகன் ஆஸ்திரேலியாவில் படிக்கின்றார். ஏனையோர்கூட மலையகத்தில் உள்ள பாடசாலைகளில் படிக்கவில்லை. சொகுசு வாழ்க்கையையே விரும்புகின்றனர்.
முன்னாள் பிரதமர் ரணிலையும், முன்னாள் அமைச்சர் நவீனையும் இன்று குறைகூறுகின்றனர். 50 ரூபா கிடைக்கவில்லையெனில் அன்று பதவி விலகியிருக்கலாம்தானே? தமிழ் முற்போக்கு கூட்டணி என்ன செய்தது? தைரியம் இல்லை.
சொகுசு வாழ்க்கையை விரும்பும் அவர்கள், மலையக மக்கள் பற்றி சிந்திப்பதில்லை. அவர்கள் ஒழுங்கான முறையில் அரசியல் செய்திருந்தால் நாங்கள் இங்கு வந்திருக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.