திபெத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 200 இற்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சீனாவின் ஒரு பகுதியாக உள்ள திபெத்தில், நேபாள எல்லைப் பகுதியையொட்டி நேற்று காலை 6.35 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. திபெத்தில் உள்ள மலைப்பகுதியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி இருந்தது.
இதனால் திபெத், நேபாள நாடுகள் நிலநடுக்கத்தில் குலுங்கின. இந்த பயங்கர நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கம் திபெத்தின் ஜிசாங்க் பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்டதால் அப்பகுதியில் கடுமையான சேதம் ஏற்பட்டது. இங்கு வசிக்கும் மக்கள் கடும் பீதி அடைந்தனர். கட்டிடங்கள் குலுங்கியதால் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.
நிலநடுக்கம் காரணமாக திபெத்தின் ஷிகாட்சே நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இடிந்த வீடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 126 பேர் உயிரிழந்துள்ளனர்.
200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என தகவல் வெளியானது. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. பாதிப்பு அதிகமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கம் காரணமாக திபெத்தில் 1,000-க்கும் அதிகமான வீடுகளில் விரிசல் ஏற்பட்டன.