தீவிரவாத முகாம்களை அழிக்க அனைத்து கட்சிகளும் ஆதரவு!

 

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவு அளிப்பதாக, அனைத்துக் கட்சி கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.

தீவிரவாத முகாம்களை அழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் கடந்த 22-ம் திகதி தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டினர் உட்பட 26 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு லஷ்கர் -இ-தொய்பா ஆதரவு அமைப்பான டிஆர்எப் பொறுப்பேற்றது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் 2 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இதையடுத்து, இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு தரப்பிலும் பரஸ்பரம் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்த, இனிமேல் எடுக்க போகும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கும் வகையிலும், இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகளின் கருத்துகளை அறியவும் நேற்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது.

இதற்கமைய அனைத்துக் கட்சி கூட்டம் டெல்லியில் நேற்று மாலை நடைபெற்றது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரிண் ரிஜிஜு, மாநிலங்களவை பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் பங்கேற்றனர்.

எதிர்க்கட்சி சார்பில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, திமுக சார்பில் திருச்சி சிவா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கும் முன்பு, தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்தும், பஹல்காம் தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்தியஅரசு எடுத்துள்ள நடவடிக்கைகளையும், இனிமேல் எடுக்க போகும் நடவடிக்கைகளையும், அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, ஜெய்சங்கர் ஆகியோர் விளக்கினர்.

நாட்டின் பாதுகாப்பு கருதி மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக, அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் உறுதி அளித்தனர்.

Related Articles

Latest Articles